
ஓடுவது என்பது ஆரோக்கியமான செயல்பாடு. ஆனால், ‘ஓடுவது மூட்டுகளைப் பாதிக்கும், நீண்டகால பாதிப்பை ஏற்படுத்தும்’ என்ற கருத்து பரவலாக உள்ளது. இது உண்மையா?
ஓடுவது என்பது அதிக தாக்கம் (high-impact) கொண்ட ஒரு செயல்பாடுதான். நாம் ஓடும்போது, ஒவ்வொரு முறையும் நம் கால் தரையில் படும்போது, உடல் எடையைப்போல இரண்டு முதல் மூன்று மடங்கு அதிக விசையை நமது உடல் தாங்குகிறது. இந்த அழுத்தம் நேராக மூட்டுகளுக்குச் செல்வதாகவும், ஓடும்போது நடப்பதைவிட மூன்று மடங்கு அதிக அழுத்தம் மூட்டுகளுக்குக் கொடுக்கப்படுவதாகவும் நாம் நினைப்பதுண்டு.
ஆனால், இது ஒன்றும் மோசமான விஷயம் அல்ல. மாறாக, ஓடுவது உங்கள் மூட்டுகளை வலுவாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
உங்கள் உடல் என்பது தேய்மானம் அடையும் வெறும் எலும்புகள் மற்றும் குருத்தெலும்புகளின் தொகுப்பு அல்ல. அது, கொடுக்கப்படும் அழுத்தங்களுக்கு ஏற்ப வளர்ச்சி அடைந்து, தன்னை மாற்றியமைத்துக் கொள்ளும் ஒரு வாழும் அமைப்பு.
உங்கள் மூட்டு பகுதி மிகவும் வலிமையானது மற்றும் இயக்கத்திற்கென்றே வடிவமைக்கப்பட்டது. முழங்கால் மூட்டுகளுக்குள் இருக்கும் குருத்தெலும்புகள் வலுவான, நெகிழ்வான திசுக்களாகும். அவை எலும்புகளுக்குத் திண்டு போல செயல்பட்டுப் பாதுகாக்கின்றன.
ஒருவரின் மூட்டுகளுக்கு அழுத்தம் கொடுக்கப்படாதபோது, உதாரணமாக நீண்டகாலம் படுக்கையில் இருக்கும்போது, அவர்களின் எலும்பு மற்றும் குருத்தெலும்புகள் பலவீனமடையத் தொடங்குகின்றன என்பதற்கு வலுவான ஆதாரங்கள் உள்ளன.
ஓடுவதால் எலும்புகளுக்கும் குருத்தெலும்புக்கும் என்ன ஆகும்?

ஓடுவது தற்காலிகமாக குருத்தெலும்புகளின் தடிமனைக் குறைக்கும். ஆனால், ஓடி முடித்த சில மணி நேரங்களில் அது இயல்பு நிலைக்குத் திரும்பிவிடும். இந்த செயல்முறை, குருத்தெலும்புகளில் ஊட்டச்சத்துக்களைக் கொண்டு செல்ல உதவும் ஒரு முக்கியமான நிகழ்வு என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இதன் மூலம், குருத்தெலும்புகள் வலுப்பெற்று மாற்றியமைக்கப்படுகின்றன.
இந்தக் கருத்துக்கு ஆதரவாக, ஓட்டப்பந்தய வீரர்களுக்கு மற்றவர்களைவிட தடிமனான குருத்தெலும்புகள் இருப்பதாகவும், குறிப்பாக அவர்களின் முழங்கால்களில் இது தெளிவாகத் தெரிவதாகவும் ஆதாரங்கள் காட்டுகின்றன. ஓட்டப்பந்தய வீரர்களுக்கு மற்றவர்களைவிட சிறந்த எலும்புத் தாது அடர்த்தி (bone mineral density) இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. நீங்கள் எவ்வளவு அதிகமாக ஓடுகிறீர்களோ, அவ்வளவு அதிகமாக மூட்டுவலி (osteoarthritis) வருவதற்கான வாய்ப்புகள் குறையும் என்று சில ஆய்வுகள் கூறுகின்றன (இதை உறுதிப்படுத்த இன்னும் கூடுதல் ஆய்வுகள் தேவை).
இவை அனைத்தும், ஓடுவது இதய மற்றும் வளர்சிதை மாற்ற ஆரோக்கியத்திற்கு உதவுவதோடு, உங்கள் மூட்டுகளின் ஆரோக்கியத்திற்கும் நீண்ட ஆயுளுக்கும் நல்லது என்பதையே சுட்டிக்காட்டுகின்றன.
ஒரு வயதைத் தாண்டி ஓடத் தொடங்கலாமா?
ஒரு குறிப்பிட்ட வயதைத் தாண்டி ஓடத் தொடங்குவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து வலுவான நேரடி ஆய்வுகள் இல்லை. ஆனால், பிற ஆய்வுகள் இது பாதுகாப்பானது மற்றும் பயனுள்ளது என்பதையே பரிந்துரைக்கின்றன.
2020-ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் அதிக தாக்கம் கொண்ட பயிற்சிகளை (plyometric training) செய்யத் தொடங்கியபோது, அவர்களின் வலிமையும் உடல் செயல்பாடுகளும் அதிகரித்தது மட்டுமல்லாமல், அது பாதுகாப்பாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்ததாகக் கண்டறியப்பட்டுள்ளது. இந்த வகை பயிற்சி ஓடுவதைவிட அதிக அழுத்தத்தைக் கொடுக்கும் என்பதால், வயதான காலத்தில் ஓடத் தொடங்குவதும் பாதுகாப்பானது மற்றும் பயனுள்ளது என்பதற்கு இது ஒரு நல்ல அறிகுறி.
எனினும், நீங்கள் மெதுவாகத் தொடங்குவது அவசியம்.

எந்த ஒரு புதிய உடற்பயிற்சியைப் போலவே, உங்கள் தசைகளும் மூட்டுகளும் புதிய அழுத்தங்களுக்குப் பழகிக்கொள்ள நேரம் தேவை. எனவே, முதலில் சிறிது நேரம் நடப்பது, பின்னர் சிறிது நேரம் ஜாகிங் செய்வது என ஆரம்பித்து, படிப்படியாக ஓடும் தூரத்தை அதிகரிக்கலாம்.
அப்படியென்றால், ஏன் ஓடுவது குறித்து இன்றும் தவறான கருத்துகள் உள்ளன?
ஓடுவதால் பல ஆரோக்கிய நன்மைகள் இருந்தாலும், கிட்டத்தட்ட பாதிக்கும் மேற்பட்ட ஓட்டப்பந்தய வீரர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஏதேனும் ஒரு காயம் ஏற்படுகிறது. அதில் முழங்கால் காயங்கள் மிகவும் பொதுவானவை. இந்தக் காயம், ஓடுவதால் ஏற்படுவதைவிட, ‘அதிகப்படியான பயன்பாட்டுக் காயங்கள்’ (overuse injuries) எனப்படும் வகையைச் சேர்ந்தவை. இதன் பொருள், உடல் பழகிக்கொள்ள நேரம் கொடுக்காமல், ஒருவர் மிக வேகமாக, அதிகமாக ஓடும்போது இந்தக் காயங்கள் ஏற்படுகின்றன.
ஓடுவது உட்பட அனைத்துப் பயிற்சிகளிலும் காயம் ஏற்படும் அபாயம் உள்ளது. இருப்பினும், அதைக் குறைக்க சில வழிகள் உள்ளன.
- மெதுவாகச் செல்லுங்கள்: வாரத்திற்கு சில கிலோமீட்டர்களுக்கு மேல் உங்கள் தூரத்தை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
- போதுமான அளவு சாப்பிடுங்கள்: ஓடுவது அதிக ஆற்றலைச் செலவழிக்கும் செயல் என்பதால், போதுமான கார்போஹைட்ரேட் மற்றும் புரதங்களை உண்பது, காயங்கள் ஏற்படாமல் தடுக்க உதவும்.
- புல்வெளியில் ஓடுங்கள்: கடினமான நிலப்பரப்பில் ஓடுவதைவிட புல்வெளியில் ஓடுவது குறைவான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
பெரும்பாலான மக்களுக்கு, ஓடுவதால் ஏற்படும் நன்மைகள் அதன் அபாயங்களைவிட மிக அதிகம். நீங்கள் மெதுவாகத் தொடங்கி, உடலுக்குப் பழகிக்கொள்ள நேரம் கொடுத்து, உங்கள் உடல் கூறுவதைக் கேட்டால், அது உங்களுக்குப் பெரும் நன்மையைத் தரும்.
