மத்திய கிழக்கு: ஈரானில் இஸ்ரேல் தாக்குதல்களில் கொல்லப்பட்ட ஈரானிய ஜெனரல்களுக்கு மரியாதை
தற்போதையச் செய்திகள் :

- தெஹ்ரானில் ஆயிரக்கணக்கானோர் இஸ்ரேல் தாக்குதல்களில் கொல்லப்பட்ட முக்கிய ஈரானிய இராணுவ தளபதிகளுக்கு அஞ்சலி செலுத்தினர்.
- ஈரான், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது “மரியாதையற்ற” பேச்சு நடையை நிறுத்தினால், அணு ஆயுத பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்கத் தயார் என்று கூறியுள்ளது.
- ஐ.நா. பொதுச்செயலாளர் குத்ரெஸ், காசாவில் உடனடி போர் நிறுத்தம் தேவை என்று கோரிக்கை விடுத்தார்.
- அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அடுத்த வாரம் காசாவில் போர் நிறுத்தம் கிடைக்கும் என்று நம்புவதாக தெரிவித்தார்.
காசாவில் இஸ்ரேல் தாக்குதல்களில் குறைந்தது 60 பேர் கொல்லப்பட்டதாக மருத்துவ ஊழியர்கள் தெரிவிப்பு
வெள்ளிக்கிழமை இரவு முதல் சனிக்கிழமை காலை வரை காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் குறைந்தது 60 பேர் கொல்லப்பட்டதாக, ஹமாஸ் நிர்வகிக்கும் பாலஸ்தீன பிரதேசத்தின் மருத்துவ ஊழியர்கள் தெரிவித்தனர்.
இதில், காசா நகரில் உள்ள பாலஸ்தீன விளையாட்டு அரங்கில், இடம்பெயர்ந்தவர்களுக்கு அடைக்கலமாக உள்ள இடத்தில் 12 பேர் கொல்லப்பட்டனர், மேலும் எட்டு பேர் தங்கள் அடுக்குமாடி குடியிருப்புகளில் கொல்லப்பட்டதாக மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்தனர்.
காசாவில் இஸ்ரேலின் தாக்குதல்களால் இதுவரை சுமார் 56,000 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக காசாவின் சுகாதார அமைச்சகம் தெரிவிக்கிறது, இதில் பொதுமக்கள் மற்றும் போராளிகளுக்கு இடையே வேறுபாடு காட்டப்படவில்லை.
காசா அதிகாரிகளின் கூற்றுப்படி, பாதிக்கப்பட்டவர்களில் பாதிக்கும் மேல் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவர்.
அக்டோபர் 7, 2023 அன்று, தெற்கு இஸ்ரேலில் ஹமாஸ் தலைமையிலான போராளிகளின் தாக்குதல்களுக்கு பதிலடியாக இஸ்ரேல் காசாவில் தாக்குதல்களைத் தொடங்கியது. அந்த தாக்குதல்களில் பெரும்பாலும் பொதுமக்களான 1,200 பேர் கொல்லப்பட்டனர், மேலும் சுமார் 250 பேர் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர்.
