
ஒரு சனிக்கிழமை இரவு… போனை கையில் எடுக்கிறீர்கள். புதுசா ஒரு ‘ஃபுட் டெலிவரி’ ஆப்பை ஓபன் பண்ணி, உங்களுக்குப் பிடிச்ச பிரியாணியோ, பர்கரோ எல்லாத்தையும் கார்ட்ல சேக்குறீங்க. ‘ஆர்டர் நவ்’ கொடுக்குறீங்க, டிராக் பண்ணவும் ஆரம்பிக்கிறீங்க. ஆனா, கடைசி வரைக்கும் சாப்பாடு வரவே வராது!
“என்னது, சாப்பாடே வராத ஆப்பா?”ன்னு ஆச்சரியமா இருக்கா? ஆனா ‘FoodNeverComes’ங்கிற ஒரே ஆப்ல மட்டும் இதுவரைக்கும் கிட்டத்தட்ட 10 லட்சம் பேர் இப்படி ஆர்டர் பண்ணி விளையாடியிருக்காங்க!
நிஜமா வராத பொருளுக்கு எதுக்கு இவ்வளவு நேரம்?
எல்லாம் அந்த ‘டொப்பமைன்’ (Dopamine) பண்ற வேலைதான்.
நம்ம மூளைக்கு “நாம ஏதோ புதுசா ஒன்ன தேடுறோம், நமக்கு பிடிச்சதை நாமதான் முடிவு பண்றோம், ஆர்டரும் பண்ணியாச்சு”ங்கிற அந்த உணர்வே ஒரு தனி சந்தோஷத்தையும், திருப்தியையும் கொடுக்குது. நிஜத்துல காசு செலவழிக்காமலே, “ஷாப்பிங் பண்ணிட்டோம்”ங்கிற மனநிறைவை இந்த ஆப்கள் தருது.
சாப்பாடு மட்டுமில்ல… 99 பைசா கல்லுல இருந்து, 99 மில்லியன் டாலர் நிலா வரைக்கும் சும்மாவே வாங்கிப் போடுற ‘Dopamine Shop’, நிஜ சிகரெட் இல்லாமலே புகையிலையை நிறுத்துற மாதிரி நடிக்கிற ‘Virtual Smoke’-னு விதவிதமா ஆப்கள் வந்துடுச்சு.
இலவசம்தானே… இதுல என்ன பிரச்சனை வரப்போகுது?
மேலோட்டமா பாக்குறப்போ இது ஒரு சின்ன ஜாலி கேம் போலத்தான் தெரியும். ஆனா, இதுல ரெண்டு முக்கியமான சிக்கல்கள் இருக்கு:

- நிஜப் பழக்கமாக மாற வாய்ப்பு: ஆராய்ச்சியாளர்கள் இதை ‘கேட்வே பிஹேவியர்’ (Gateway Behaviour) என்கிறார்கள். அதாவது, போலி கேசினோ விளையாட்டுகளை விளையாடியவர்களில் பலர், பின்னாளில் நிஜமாகவே பணத்தைப் பணயம் வைத்து சூதாடத் தொடங்கியதாக ஆய்வுகள் சொல்கின்றன. அதேபோல, இந்த போலி ஆப்களில் ஆர்டர் செய்து பழகும் பழக்கம், நாளடைவில் நிஜமாகவே தேவையில்லாத பொருட்களை வாங்கிப் பணத்தை விரயம் செய்யும் பழக்கமாக மாறக்கூடும்.
- நம்மை வைத்தே நமக்கு வைக்கும் ஆப்பு (விளம்பரங்கள்): “இலவசமா வர்ற உணவுக்கு பின்னாடி பெரிய விலையே இருக்கும்” என்பார்கள். இந்த ஆப்கள் இலவசம் என்றாலும், நீங்கள் ஆர்டர் செய்யும் போலி டாகோஸையோ, ஜாக்கெட்டையோ குறிவைத்து (Cookies மூலம்) தகவல்களைச் சேகரிக்கும். அடுத்த சில நிமிடங்களில், உங்கள் இன்ஸ்டாகிராமிலோ, யூடியூபிலோ உண்மையான உணவகங்களின் விளம்பரங்கள் வந்து விழும். “சரி, நிஜமாவே ஆர்டர் பண்ணிடுவோம்” என்று உங்களைத் தூண்டுவதுதான் இதன்பின்னே இருக்கும் அசல் பிசினஸ்!
சுருக்கமாகச் சொன்னால்:
இலவசமாக மூளைக்குச் சந்தோஷம் தருவது போலத் தோன்றும் இந்த ஆப்கள், மறைமுகமாக நம்மைக் கவனித்து, நிஜமாகவே பணத்தைச் செலவழிக்க வைக்கும் ஒரு வலைதான்!
