
ச. நாகராஜன்
2500 ஆண்டுகளுக்கு முன் உள்ள சரித்திரம் இது. வரலாற்றில் ஒரு அபூர்வ டாக்டரைப் பற்றி நம்மால் அறிய முடிகிறது. அவர் தான் டாக்டர் ஜீவகன் குமாரபர்த்யா (கி.மு. 525-450). புத்தரின் சமகாலத்தவராக இவர் கருதப்படுகிறார்.
புத்தர், மகத சக்ரவர்த்தி பிம்பசாரர், அவந்தி மன்னர் சந்த்ரப்ரயோதா உள்ளிட்டவர்களுக்கு அவர் வைத்தியம் செய்துள்ளார். பாலி மொழியில் உள்ள திரிபிடிகம் நூலானது அவரது அபூர்வ சிகிச்சைகளைப் பற்றி மிக விரிவாகக் கூறுகிறது. எல்லாமே வைத்திய அற்புதங்கள் தாம்!
அனாதைக் குழந்தையிலிருந்து அரசவை மருத்துவராக…
அனாதையாக இருந்த ஜீவகன் மகத சக்ரவர்த்தியால் போற்றி வளர்க்கப்பட்டார். ராஜ்கிர் என்ற இடத்தில் ஒரு சாலையோரம் கிடந்த குழந்தையைப் பார்த்து திடுக்கிட்ட மன்னர் அதை எடுத்து வளர்க்கலானார். உயிரோடு இருந்ததால் அவர் ஜீவகன் என்று பெயரிடப்பட்டார்.
குமார அபயா என்ற இளவரசருக்கு அவர் சேவை செய்ததால் அவர் குமாரபர்த்யா என்று அழைக்கப்பட்டார். இப்போது பாகிஸ்தானில் உள்ள தக்ஷசீலாவிற்கு அவர் படிக்கச் சென்றார். எட்டு அங்கமுடைய ஆயுர்வேதத்தில் அவர் தேர்ந்த அபூர்வ வைத்தியரானார்.
“ஒவ்வொரு செடியும் ஒரு விதத்தில் நோய் தீர்க்கும் மூலிகையாக இருக்கிறதே!”
ஒவ்வொரு செடியுமே ஒரு மூலிகை தான்! இதைக் கற்பித்த குரு ஜீவகனை சோதனை செய்ய விரும்பினார். தக்ஷசீலாவைச் சுற்றி 5 மைல் சுற்றளவில் உள்ள செடிகளில் உபயோகமில்லாத ஒரே ஒரு செடியைக் கொண்டு வருமாறு அவர் குரு பணித்தார். ஜீவகன் எல்லா இடத்திலும் அலைந்து திரிந்தார். கடைசியில் குருவிடம் வந்த அவர், “ஒவ்வொரு செடியும் ஒரு விதத்தில் நோய் தீர்க்கும் மூலிகையாக இருக்கிறதே. நான் என்ன செய்வது? என்னால் உபயோகமில்லாத ஒரு செடியையும் காணமுடியவில்லையே” என்றார். இதைக் கேட்ட குரு மிகவும் மனம் மகிழ்ந்தார்.
அவரது நூற்றுக்கணக்கான சிகிச்சைகளில் சிலவற்றை மட்டும் இங்கு பார்ப்போம்.
ஜீவகனின் குறிப்பிடத்தக்க சிகிச்சைகள்
தக்ஷசீலாவிலிருந்து மகதத்திற்கு திரும்பினார் ஜீவகன். வரும் வழியில் அயோத்யாவில் தங்கினார். அங்கு பெரும் வணிகராகத் திகழ்ந்த வணிகரின் மனைவியான் ஸ்ரேஷ்டி தீராத தலைவலியால் துடித்த வண்ணம் இருந்தார். அங்குள்ள வைத்தியர்களால் அவளது தலைவலியைத் தீர்க்க முடியவில்லை.
ஜீவகன் அவளது மூக்கில் மருத்துவ நெய்யைச் செலுத்தினார். மூன்றே நாட்களில் ஸ்ரேஷ்டியின் தீராத தலைவலியைத் தீர்த்தது. ஸ்ரேஷ்டி ஜீவகனுக்கு 26000 பொற்காசுகளை வழங்கியதோடு தேர், பணியாள்களையும் வழங்கினார்.
Fistula எனப்படும் புரைபுண்ணால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார் மகத மன்னர் பிம்பசாரர். அவரது நிலையைக் கண்டு அவரது ராணிகள் அவரைக் கேலி செய்தனர். அவரால் வலியையும் தாங்க முடியவில்லை. மற்றவர்கள் கேலி செய்ததால் ஏற்பட்ட அவமானத்தையும் தாங்க முடியவில்லை. ஜீவகன் ஒரே ஒரு களிம்பு மருந்தை அவரிடம் கொடுத்து அதைப் பூசச் சொன்னார். அவ்வளவு தான் தீராத புரைபுண் தீர்ந்தது. மன்னர் பெரிதும் மகிழ்ந்தார். அவருக்கு ஏராளமான பரிசுகளை வழங்கியதோடு அவரைத் தனது ஆஸ்தான ராஜ வைத்தியராக அமர்த்தினார்.

ராஜ்கிரில் இருந்த ஸ்ரேஷ்டி இன்னும் ஐந்து அல்லது ஏழு நாட்கள் தான் உயிரோடு இருப்பார் என்று வைத்தியர்கள் கூறி விட்டனர். அப்படி ஒரு தீர்க்க முடியாத நோய் அவருடையது. எல்லா வைத்தியர்களும் கைவிட்ட நிலையில் ஜீவகன் அவளிடம் சென்று தன் சிகிச்சையைத் தொடங்கினார். ஸ்ரேஷ்டியை இடது புறமாக ஏழு நாட்கள் கட்டினார் ஜீவகன். பின்னர் வலது புறமாக ஏழு நாட்களும், நிமிர்ந்த நிலையில் ஏழு நாட்களும் கட்டினார். பிறகு அவரது தலையில் மண்டையோட்டைப் பிளந்து இரு ஓட்டைகளைச் செய்து இரண்டு புழுக்களை வெளியில் எடுத்தார். பிறகு மண்டையோட்டை மூடி தைத்து சரி செய்தார். ஸ்ரேஷ்டி அனைவரும் ஆச்சரியப்படும் விதத்தில் பிழைத்தாள். தான் வாக்களித்தபடியே தனது சொத்து அனைத்தையும் ஜீவகனுக்கு ஸ்ரேஷ்டி வழங்கினாள். ஆனால் ஒரு லட்சம் பொற்காசுகளை மட்டும் ஜீவகன் எடுத்துக் கொண்டார்.
வாரணாசியில் வசித்த ஸ்ரேஷ்டியின் மகன் குடலில் ஏற்பட்ட கட்டியால் வருந்தினான். ஜீவகன் அவனிடம் வந்து தனது சஸ்திரத்தால் அவனது வயிற்றைக் கிழித்து அவன் குடலை உருவினார். அவனது கட்டியை அகற்றினார். பின்னர் முன் போல இருக்கும்படி அவன் குடலை வைத்து வயிற்றில் தையலைப் போட்டார். அவன் குணமானான்.
இப்படி இன்னும் ஏராளமான சம்பவங்களை அவர் வாழ்க்கை வரலாறு கூறுகிறது.
ஜீவகன் உலகம் கண்ட அபூர்வ டாக்டர்களில் ஒருவர் தானே!
***
