உலகப் பொருளாதார மேடையில் தங்களின் ஆதிக்கத்தை நிலைநாட்ட அனைத்து நாடுகளும் ஓடிக்கொண்டிருக்கும் வேளையில், இந்திய அரசாங்கம் ஒரு மிக முக்கியமான அதிரடி ஆட்டத்தைத் தொடங்கியுள்ளது. இந்திய பாண்டுகளில் (Bonds/கடன்பத்திரங்கள்) முதலீடு செய்யும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கான வரிச் சுமையைக் கணிசமாகக் குறைக்கும் திட்டங்களை மத்திய அமைச்சரவை தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது.
அரசு பாண்டுகள் மூலம் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ஈட்டும் வட்டி வருமானத்தின் மீது தற்போது விதிக்கப்படும் 20% வரியை முழுமையாக நீக்குவது அல்லது அதைப் பாதியாகக் குறைப்பதுதான் இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம். ஏன் இந்திய அரசாங்கம் திடீரென வெளிநாட்டுப் பணத்தின் மீது இவ்வளவு ஆர்வம் காட்டுகிறது?
வலை வீசுவது ஏன்?
யதார்த்தமாகப் பார்த்தால், சர்வதேச சந்தையில் நிலவும் சில இக்கட்டான சூழ்நிலைகளே இந்தியாவை இந்த முடிவுக்குத் தள்ளியுள்ளன.
உலக அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவது இந்தியாவின் இறக்குமதி செலவை அதிகரித்துள்ளது.
அமெரிக்காவின் புதிய வர்த்தகக் கொள்கைகள் மற்றும் ஈரான் எல்லைப் பகுதியில் நிலவும் புவிசார் அரசியல் பதற்றங்கள் உலகச் சந்தையை உலுக்கி வருகின்றன.
இதன் விளைவாக, வெளிநாட்டுப் போர்ட்ஃபோலியோ முதலீடுகள் (FIIs) இந்தியாவை விட்டு வெளியேறியதால், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவில் சரிவைச் சந்தித்தது.
டாலர் விலை உயர்ந்தால்… அத்தியாவசியப் பொருட்களின் விலை ஏன் ஏறுகிறது?
“அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்துவிட்டது” என்று செய்திகளில் வரும்போது, ஒரு சாமானிய மனிதனுக்கு, “அமெரிக்காவில் இருக்கும் டாலர் விலை ஏறினால், இங்குள்ள சமையலறைக்கு என்ன சம்பந்தம்?” என்று தோன்றுவது இயல்புதான். ஆனால், அதற்குப் பின்னால் ஒரு பெரிய சங்கிலித் தொடர் இருக்கிறது.
நாம் தினமும் வாகனங்களில் ஊற்றும் பெட்ரோல், டீசலுக்கான கச்சா எண்ணெயை வெளிநாடுகளில் இருந்துதான் வாங்குகிறோம். அதை சர்வதேச விதிகளின்படி ‘அமெரிக்க டாலர்’ கொடுத்துதான் வாங்க முடியும்.
உதாரணமாக: முன்னதாக 1 டாலர் மதிப்புள்ள பொருளை வாங்க இந்தியப் பணம் 80 ரூபாய் கொடுத்தால் போதும் என்று வைத்துக்கொள்வோம்.
தற்போது ரூபாயின் மதிப்பு சரிந்து, அதே 1 டாலர் பொருளுக்கு நாம் 96 ரூபாய் கொடுக்க வேண்டியுள்ளது.
பொருள் அதே 1 டாலர் தான், ஆனால் நம் நாட்டுப் பணம் 16 ரூபாய் அதிகமாகச் செலவாகிறது. இதனால் அரசாங்கத்திற்கும், எண்ணெய் நிறுவனங்களுக்கும் இறக்குமதி செலவு அதிகரிக்கும். அவர்கள் அந்தப் பாரத்தை பெட்ரோல், டீசல் விலையை ஏற்றி மக்கள் மீது வைப்பார்கள்.
பெட்ரோல், டீசல் விலை ஏறினால்… சந்தைக்கு வாகனங்களில் காய்கறி, அரிசி, பருப்பு ஏற்றி வருவதற்கான வண்டிக்கூலி (Transportation Cost) அதிகமாகும். வண்டிக்கூலி அதிகமானால், வியாபாரிகள் அந்த நஷ்டத்தை ஈடுகட்ட காய்கறி விலையை உயர்த்துவார்கள்.
கடைசியில், டாலர் விலை ஏறியதால்… இங்குள்ள மக்கள் வாங்கும் தக்காளி, வெங்காயம், அரிசி, பருப்பு என அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலையும் ஏறிவிடுகிறது. இதைத்தான் பொருளாதாரம் படித்தவர்கள் “பணவீக்கம்” (Inflation) என்று கூறுகிறார்கள். சுருக்கமாகச் சொன்னால், நாணயத்தின் மதிப்பு குறைந்து, பொருட்களின் விலை ஏறுவதுதான் பணவீக்கம்! இந்த ஆபத்திலிருந்து தப்பிக்கத்தான் நமக்கு அவசரமாக “அந்நிய நாட்டு டாலர்” தேவைப்படுகிறது.
ரிசர்வ் வங்கியின் அதிரடித் திட்டம்: FAR என்றால் என்ன?
வரித் தள்ளுபடி ஒருபுறமிருக்க, இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மற்றொரு முக்கிய எல்லையைத் தளர்த்தத் திட்டமிட்டுள்ளது. ‘முழுமையாக அணுகக்கூடிய வழிமுறை’ (Fully Accessible Route – FAR) எனப்படும் திட்டத்தின் கீழ், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய அரசுப் பத்திரங்களை வாங்குவதற்கான பட்டியலை விரிவுபடுத்த வாய்ப்புள்ளது.
இதன் மூலம், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் குறிப்பிட்ட சில நீண்ட கால அரசு பாண்டுகளை (Long-duration sovereign bonds) எந்தவித முதலீட்டு வரம்புகளும் (Limits) இன்றி எவ்வளவு வேண்டுமானாலும் வாங்க அனுமதிக்கப்படுவர். ரிசர்வ் வங்கி இதற்கு முன்னதாக 2024 ஆம் ஆண்டில் இத்திட்டத்தை மாற்றியமைத்தபோது, 14 ஆண்டுகள் மற்றும் 30 ஆண்டுகள் முதிர்வு காலம் கொண்ட நீண்ட கால அரசுப் பத்திரங்களை இந்தப் பட்டியலிலிருந்து நீக்கியிருந்தது. தற்போது நிலவும் டாலர் தட்டுப்பாட்டைப் போக்க, மீண்டும் அந்த நீண்ட காலப் பத்திரங்களை வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்குக் கட்டுப்பாடு இன்றி விற்க ரிசர்வ் வங்கி தயாராகி வருகிறது.
அரசாங்கத்திற்கு அடுத்த 15 அல்லது 30 ஆண்டுகளுக்குத் தேவைப்படும் பெரும் தொகையை, உள்நாட்டில் சிறுகச் சிறுகக் கடன் வாங்குவதற்குப் பதிலாக, ஒரே நேரத்தில் வெளிநாட்டுப் பெரிய நிறுவனங்களிடம் பாண்டுகளை விற்று மொத்தமாக டாலராகப் பெற்றுக்கொள்ளும் உத்தி இதுவாகும்.
ஒரு சுவாரசியமான கற்பனை: இந்த முதலீடுகள் வந்து குவிந்தால் என்ன நடக்கும்?
அரசாங்கமும் ரிசர்வ் வங்கியும் விரித்த இந்தச் சலுகை வலையில் விழுந்து, உலகளாவிய முதலீட்டாளர்கள் தங்களின் டாலர் மூட்டைகளை இந்தியச் சந்தையில் இறக்கத் தொடங்குகிறார்கள் என்று ஒரு நிமிடம் கற்பனை செய்து பார்ப்போம். அப்போது நம் அன்றாட வாழ்க்கையிலும் பொருளாதாரத்திலும் என்னென்ன மாற்றங்கள் நிகழும்?
1. பலமடையும் இந்திய ரூபாய்:
டாலர் புழக்கம் இந்தியாவிற்குள் அதிகரிக்க அதிகரிக்க, சர்வதேச சந்தையில் இந்திய ரூபாய்க்கான தேவை (Demand) பல மடங்கு உயரும். சமீபத்தில் சரிவைச் சந்தித்த ரூபாய் மதிப்பு, மீண்டும் பலமடைந்து உலக அரங்கில் நிலையான இடத்தை எட்டும்.
2. குறையும் கடன் வட்டி விகிதங்கள்:
அரசாங்கத்தின் பாண்டுகளில் வெளிநாட்டுப் பணம் குவியும்போது, உள்நாட்டு வங்கிகளின் மீதான நிதி அழுத்தம் குறையும். இதன் விளைவாக, பொதுமக்கள் வாங்கும் ஹோம் லோன், கார் லோன் மற்றும் தொழில் தொடங்க வாங்கும் கடன்களுக்கான வட்டி விகிதங்கள் (Interest Rates) குறையக்கூடும்.
3. பங்குச்சந்தையில் எழுச்சி:
பாண்ட் மார்க்கெட்டுக்குள் நுழையும் வெளிநாட்டுப் பணம், மெதுவாக இந்தியப் பங்குச்சந்தை (Stock Market) பக்கமும் நகரும். வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் (FIIs) இந்தியப் பங்குகளை வாங்கத் தொடங்கும்போது, சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடுகள் புதிய வரலாற்று உச்சங்களைத் தொடும்.
4. உள்கட்டமைப்புப் புரட்சியும் வேலைவாய்ப்பும்:
இந்தியாவிற்குள் வரும் இந்த அந்நியப் பணம் சும்மா முடங்கிக் கிடக்காது. நாட்டின் புதிய எக்ஸ்பிரஸ் சாலைகள், நவீன துறைமுகங்கள், அதிவேக டிஜிட்டல் நெட்வொர்க்குகள் எனப் பிரம்மாண்ட உள்கட்டமைப்பு வசதிகளாக மாறும். புதிய தொழிற்சாலைகள் முளைக்கும்போது, லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு உயர்தர வேலைவாய்ப்புகள் உருவாகும்.
அடுத்தவன் காசை வாங்கிச் செலவு பண்ணினால்… அவனுக்கு எப்படி லாபத்தோடு திருப்பிக் கொடுப்பது?
இங்குதான் ஒரு மிக முக்கியமான கேள்வி எழுகிறது. “அடுத்தவர் பணத்தை வாங்கி இப்படி ரோடு, போர்ட் (துறைமுகம்) என்று போட்டு வைத்தால்… அவனுக்கு எப்படி லாபத்தோடு வட்டியும் முதலுமாகத் திருப்பிக் கொடுப்போம்? நாடு கடனாளியாகி விடாதா?”
அரசாங்கம் இதைக் கையாளும் விதம் இதோ:
1. உள்கட்டமைப்பு என்பது ஒரு ‘வருமான இயந்திரம்’:
வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பணத்தை வாங்கி அரசாங்கம் சும்மா செலவு செய்வதில்லை. அதை வருமானம் தரும் திட்டங்களில் மட்டுமே முதலீடு செய்கிறது. உதாரணமாக, ஒரு புதிய எக்ஸ்பிரஸ் சாலை அமைக்கப்பட்டால், அதில் செல்லும் வாகனங்கள் மூலம் சுங்கக்கட்டணம் (Toll Charges) வசூலிக்கப்படும். புதிய துறைமுகங்கள் வழியாக நடக்கும் ஏற்றுமதி, இறக்குமதிக்குச் சரக்குக் கட்டணங்கள் (Port Fees) வசூலிக்கப்படும். இந்த நேரடி வருமானத்தில் இருந்துதான் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் வட்டியும் முதலும் அடைக்கப்படும்.
2. மல்டிபிளேயர் எஃபெக்ட் (Multiplier Effect):
ஒரு சிறந்த சாலை வசதி வரும்போது, அந்தச் சாலையின் இரு பக்கமும் பெரிய பெரிய தொழிற்சாலைகளும், நிறுவனங்களும் முளைக்கும். அந்த நிறுவனங்கள் லாபம் ஈட்டும்போது அரசாங்கத்திற்கு ஜிஎஸ்டி (GST) மற்றும் கார்ப்பரேட் வரிகள் (Corporate Taxes) மூலமாகப் புதிய வருவாய் கிடைக்கும். அதாவது, நாம் வாங்கும் 1 ரூபாய் கடன், சரியான உள்கட்டமைப்பாக மாறும்போது நாட்டுக்குள் 3 ரூபாய் முதல் 4 ரூபாய் வரை புதிய உள்நாட்டு உற்பத்தியையும் லாபத்தையும் உருவாக்குகிறது.
3. இதில் இருக்கும் ஆபத்து:
அதே நேரத்தில் இதில் ஒரு பெரிய ஆபத்தும் இருக்கிறது. வெளிநாட்டுப் பணத்தை வாங்கி, அதைச் சரியான வருமானம் தராத திட்டங்களில் முதலீடு செய்தாலோ அல்லது நாட்டின் உற்பத்தித் திறன் பெருகாமல் போனாலோ, நாடு “கடன் பொறியில்” (Debt Trap) மாட்டிக்கொள்ளும். அதனால்தான், அரசாங்கம் இந்தப் பணத்தை இலவச திட்டங்களுக்கோ அல்லது அன்றாடச் செலவுகளுக்கோ பயன்படுத்தாமல், உள்கட்டமைப்புத் துறையில் மட்டுமே மிகக் கவனமாக முதலீடு செய்கிறது.
சுருக்கமாகச் சொன்னால், வெளிநாட்டு முதலீடு என்பது ஒரு தொழிலைத் தொடங்குவதற்காக நாம் வாங்கும் வணிகக் கடன் (Business Loan) போன்றது. அந்தப் பணத்தை வீணடிக்காமல், திறம்படப் பயன்படுத்திப் புதிய வருமானத்தை உருவாக்கினால், கடனையும் அடைத்துவிட்டு நாட்டின் பொருளாதாரத்தையும் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல முடியும்.

