எபோலா என்றாலே பலருக்கும் ஒரு நடுக்கம் உண்டு. இது ஒரு ‘RNA வைரஸ்’ வகை சார்ந்தது. கம்ப்யூட்டர் வைரஸ்கள் போல, இவை மிக வேகமாகத் தன் உருவத்தை மாற்றிக்கொண்டே (Mutation) இருக்கும். ஒரு தடுப்பூசியை நாம் கண்டுபிடித்து அமல்படுத்துவதற்குள், அது புதிய முகமூடியுடன் வந்துவிடும். இதுதான் எபோலா போன்ற வைரஸ்களைக் கட்டுப்படுத்துவதில் உள்ள மிகப்பெரிய சவால்.
ஏன் புதிய தடுப்பூசிகள் தேவை?
உலகத்தில் ஏற்கனவே Ervebo மற்றும் Zabdeno/Mvabea என இரண்டு எபோலா தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. ஆனால், இவை எபோலாவின் ‘Zaire’ வகை வைரஸை அழிக்க மட்டுமே உருவாக்கப்பட்டவை. தற்போது காங்கோ (DRC) மற்றும் உகாண்டா பகுதிகளில் பரவி வரும் வைரஸ் ‘Bundibugyo’ எனும் வேறொரு ரகம். இதன் மேற்பரப்பு புரதங்கள் மாறுபட்டு இருப்பதால், பழைய மருந்துகள் இதற்குப் போதுமான பலனைத் தருவதில்லை. அதனால்தான், தற்போது இந்த புதிய வகை வைரஸிற்கான தடுப்பூசிகளை உருவாக்குவதில் உலகம் கவனம் செலுத்தி வருகிறது.
களத்தில் இருக்கும் ‘மூன்று குதிரைகள்’ (தடுப்பூசி வேட்பாளர்கள்)
தற்போது மூன்று நிறுவனங்கள்/அமைப்புகள் இந்தத் தடுப்பூசி ரேஸில் முன்னணியில் உள்ளன:
- IAVI தடுப்பூசி: WHO நிபுணர்களால் “மிகவும் நம்பிக்கைக்குரிய தடுப்பூசி” என அழைக்கப்படுகிறது. இது ஒரு டோஸ் (single-dose) தடுப்பூசி மற்றும் குரங்குகளிடம் சோதிக்கப்பட்டு வெற்றி பெற்றுள்ளது. மனிதர்களுக்கான மருத்துவச் சோதனைகள் தொடங்க இன்னும் 7 முதல் 9 மாதங்கள் ஆகலாம்.
- Moderna தடுப்பூசி: கோவிட் காலத்துல மிரள வைத்த அதே mRNA தொழில்நுட்பத்தை வைத்து இதை உருவாக்குகிறார்கள். இது வைரஸின் மேற்பரப்பு புரதத்தை நேரடியாகத் தாக்குகிறது. தற்போது இது ஆய்வக மற்றும் விலங்குச் சோதனைக் கட்டத்தில் உள்ளது.
- ஆக்ஸ்போர்டு தடுப்பூசி: ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா இணைந்து இதை உருவாக்குகின்றன. இது 2 முதல் 3 மாதங்களில் மனிதச் சோதனைகளுக்கு வர வாய்ப்புள்ளது. தொற்று ஏற்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு இது ஒரு டோஸ் போலவும், முன்களப் பணியாளர்களுக்கு இரண்டு டோஸ் போலவும் பயன்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிஜமான சவால் எது?
தடுப்பூசிகளைக் கண்டுபிடிப்பது ஒரு பக்கம் இருக்க, அவற்றைச் சரியான நேரத்தில் களத்திற்குக் கொண்டு செல்வதில்தான் பெரிய சிக்கல் உள்ளது.
- பாதிக்கப்பட்ட பகுதிகள் பெரும்பாலும் தொலைதூரக் காடுகளாகவும், போரினால் பாதிக்கப்பட்ட இடங்களாகவும் இருப்பதால், அங்குக் கட்டமைப்புகளை உருவாக்குவது கடினம்.
- வைரஸை விட, மக்களிடையே இருக்கும் தடுப்பூசி குறித்த அச்சம் மற்றும் தவறான தகவல்கள், மருத்துவச் சோதனைகளுக்குத் தன்னார்வலர்களைத் திரட்டுவதைப் பெரும் சவாலாக மாற்றுகின்றன.
எபோலா வராமல் தடுக்கும் முன்னெச்சரிக்கை முறைகள்
தடுப்பூசிகள் வரும் வரை, அடிப்படைத் தொற்றுக்கட்டுப்பாட்டு முறைகளே நம்மிடம் உள்ள ஒரே ஆயுதம். அதைப் பின்பற்றுவது எப்படி?
- நேரடித் தொடர்பைத் தவிர்த்தல்: நோயாளி அல்லது பாதிக்கப்பட்டவரின் ரத்தம், வியர்வை, உமிழ்நீர் போன்ற உடல் திரவங்களைத் தொடுவதைத் தவிர்க்க வேண்டும்.
- சுத்தம்: அடிக்கடி கைகளை சோப்பு அல்லது சானிடைசர் கொண்டு கழுவுவது கட்டாயம்.
- விலங்குகளிடம் எச்சரிக்கை: வௌவால்கள், குரங்குகள் மற்றும் இறந்து கிடக்கும் காட்டு விலங்குகளைத் தொடுவதையோ அல்லது அதன் இறைச்சியை உண்பதையோ கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.
- பாதுகாப்பான உடல் அடக்கம்: எபோலாவால் இறந்தவர்களின் உடல்களைத் தொடுவதோ, பாரம்பரியச் சடங்குகள் செய்வதோ கூடாது. பயிற்சி பெற்ற மருத்துவக் குழுவினரே இறுதிச் சடங்குகளைச் செய்ய வேண்டும்.
புதிய தடுப்பூசிகள் வெற்றி அடைந்தால், அது எபோலா ஒழிப்பில் ஒரு பெரிய மைல்கல்லாக இருக்கும். அதுவரை விழிப்புணர்வுடன் இருப்பதுதான் நம்மைப் பாதுகாக்கும் சிறந்த வழி.
