பால் (MILK) வேண்டாம் சாவே மேல்!

பால் (MILK) வேண்டாம் சாவே மேல்!
லண்டன் சுவாமிநாதன்

ஜான் டன் (John Donne 1572-1631) என்பவர் பிரபல ஆங்கிலக் கவிஞர். அவர் மரணப் படுக்கையில் கிடந்தார். அவருக்கு டாக்டர் சைமன் பேக்ஸ் (Dr Simon Faxe) சிகிச்சை அளித்து வந்தார் . இனிப்பு மருந்துகள் தருகிறேன். அத்துடன் 20 நாட்களுக்கு தொடர்ந்து பசும் பால் குடியுங்கள். உடம்பு தேறி விடும் என்றார் . ஆனால் ஜானுக்கு பால் அறவே பிடிக்காது.கஷ்டப்பட்டு கொஞ்சம் குடித்துப் பார்த்தார். ஆயினும் முடியவில்லை. “டாக்டர்! பால் குடிப்பதை விட எனக்கு மரணமே மேல். நான் சாவதற்குத் தயார்” என்று சொல்லிவிட்டார்.

(அவரது காலத்தில் பாலில் இப்போதுள்ள அசுத்தங்கள் கிடையாது. ஆயினும் அவர் மறுத்தார்.) இப்போது மேலை நாடுகளில் வேகன் VEGAN என்னும் பால் பொருள் வெறுப்பு அணியினர் பெருகி வருகின்றனர். பிரபல உணவு விடுதிகளான கென்டகி ப்ரைட் சிக்கன், மேக் டொனால்ட் , சப் வே Mac Donald, Kentucky Fried Chicken, Sub Way) முதலியன vegan வேகன் உணவுப் பொருட்களை விளம்பரப்படுத்தி வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக்கொள்கின்றன.

காரணம் என்னவெனில் மேலை நாட்டிலுள்ள பெரும்பாலோருக்கு பாலில் உள்ள லாக்டோஸ் (Lactose) பொருட்கள் ஒத்துக் கொள்ளாது . மேலும் தேன், பால் முதலியன தேநீக்களையும் பசு மாடுகளையும் கொடுமைப்படுத்துவதாகும் என்றும் பிரசாரம் செய்யப்படுகின்றன. ஆனால் வேத காலம் முதல் இன்று வரை ஆசாரமான ஹிந்துக்கள் கூட இவற்றைப் பூஜையிலும் பயன் படுத்தி உணவாகவும் சாப்பிடுகின்றனர்.

அந்தக் காலத்தில் பிராணிகளுக்கு மிஞ்சியது போக இருந்ததை இந்துக்கள் எடுத்தனர். இப்போதோ மேலை நாடுகளில் இயந்திரங்களை வைத்து மாடுகளில் இருந்து பாலை ஒட்டப்பிழிந்து விடுகின்றனர். யார் வீட்டிலாவது மைக்ராஸ்க்கோப் என்னும் கருவி இருந்தால் மேலை நாட்டுப் பாலில் மிதக்கும் மாட்டின் முடி, கொழுப்பு , ரத்தம் மிதப்பதைக் காணலாம்.இதனால்தான் மஹாத்மா காந்தி, ஆட்டுப் பாலுக்கு மாறினார் என்ற ஒரு தகவலும் உண்டு.

பால் மற்றும் பால் பொருட்களைத் தவிர்க்கும் ‘வேகன்’கள் இதையெல்லாம் அறிவர். மேலும் மேலை நாட்டு பசுமாடுகள் சித்திரவதை செய்யப்படுகின்றன. அவை தலையைக் கூட ஆட்டமுடியாத படி நெருக்கமாகக் கூண்டுகளில் அடைக்கப்படுகின்றன. கொழுப்புச் சத்தைக்கூட்டி மாமிசத்துக்கு வெட்டுவதற்காக பலவகை ஊசி மருந்துகள் ஏற்றப்படுகின்றன. மாமிசப் பொடி கலந்த உணவு ஊட்டப்படுகின்றன. இந்தியாவில் ‘நாய்ப் பிழைப்பு’ என்று சொல்லுவர் . ஆனால் மேலை நாட்டில் ‘பசு மாட்டுப் பிழைப்பு’ என்றே சொல்ல வேண்டும். அவ்வளவு கேவலமாக மாடுகள் வாழ்கின்றன. நாய்கள் ‘சோபா’ (Sofa) வில் தூங்குகின்றன . கார்களில் பவனி வருகின்றன. மாடுகளோ அடைக்கப்பட்ட லாரிகளில் கசாப்புக்கு கடைக்குச் செல்கின்றன. சூப்பர் மார்க்கெட்டுகளில் விற்கும் ‘பால்’களுக்கு 15 நாளைக்குப் பின்னர் எக்ஸ்பைரி டேட்Expiry Date (பயன்படுத்தக் கூடாது என்ற ) முத்திரை குத்துகின்றனர். இவ்வளவு காலம் இது கெடாமல் இருப்பதற்கு இதில் பல பொருட்கள் கலக்கப்படுகின்றன.

இப்பொழுது கொரோனா வைரஸ் (Corona Virus) மக்கள் உயிரைப் பறிப்பது போல மாடுகளுக்கு பைத்திய நோய் (Mad Cow Disease) பரவியவுடன் லட்சக்கணக்கான மாடுகளை எரித்துப் புதைத்தனர். கொடுமைகளுக்கு அளவில்லை என்ற அளவுக்கு பால் பண்ணைத் தொழில் நடக்கிறது . இந்தியாவிலாவது இத்தகைய கொடுமைகள் நிகழா வண்ணம் பாதுகாப்பது மக்களின் கடமை. மாட்டு மாமிசத்தை இந்துக்கள் தடை செய்ததற்கு இந்த MAD COW DISEASE ‘மேட் கவ் டிஸீஸ்’ ஒரு காரணம் போலும் . இது மனிதர்களுக்கும் பரவ முடியும் என்று மருத்துவர்கள் ஏசிசரித்தவுடன் அத்தனை பசுமாடுகளையும் கொட்டிலுடன் எரித்தனர். இது போல பல முறை கோடிக்கணக்கான கோழிக் குஞ்சுகளையும் முட்டைகளையும் அழித்தனர் சால்மோனெல்லா (SALMONELLA) வைரஸ் பரவுகிறது என்று அச்சுறுத்தினர்.
இதன் ஆங்கில வடிவம் இந்த ‘பிளாக்’கில் வந்தவுடன் திரு நஞ்சப்பா என்ற நேயர் எழுதிய விமர்சனத்தில் எல்லா மிருகங்களும் குழந்தைப் பருவத்தில் மட்டும் பால் குடித்துவிட்டு பின்னர் நிறுத்திவிடுகின்றன. ஆ னால் மனிதன் மட்டும் தாய்ப்பாலை விட்டவுடன் பசும்பாலை குடிப்பது அவசியமில்லையே என்று எழுதினார். இந்து சிந்தனையைத் தூண்டும் பதில்; பாலில் உள்ள கால்சியம் போன்ற சத்துக்கள் நமக்குத் தேவை என்றாலும் பசு மாடுகளைக் கொடுமைப்படுத்தக் கூடாது என்பது நியாயமே.