வைட்டமின் – டி குறைபாடு யாருக்கு எல்லாம் வரும்? இதைக் கண்டறிவது எப்படி? அதற்கான சிகிச்சை முறைகள் என்னென்ன? படிக்கலாம் வாங்க……
வெ.சுப்பிரமணியன்
உயிர்ச்சத்து – டி எனப்படும் வைட்டமின் – டி (VITAMIN – D) குறைபாடு என்பது ஒருவரது உடலில் குறிப்பிட்ட இந்த உயிர்ச்சத்து போதுமான அளவில் இல்லாமல் இருப்பதாகும். உயிர்ச்சத்து – டி உடலில் எலும்புகளை வளர்க்கவும் பராமரிக்கவும் தேவைப்படுகிறது. ஒருவரது சருமத்திற்குப் போதுமான அளவுக்குச் சூரிய ஒளி கிடைக்காவிட்டாலோ, சூரிய ஒளியை உட்கவரும் திறனைக் குறைக்கும் கோளாறுகள் அவருக்கு இருந்தாலோ அல்லது அவர் உணவில் போதுமான அளவுக்கு உயிர்ச்சத்து – டி எடுத்துக் கொள்ளாவிட்டாலோ அவருக்கு இக்குறைபாடு ஏற்படக் கூடிய அபாயம் உள்ளது.
இது சூரிய ஒளி வைட்டமின் (SUN SHINE VITAMIN) என்றும் அழைக்கப்படுகிறது, ஒருவரது சருமத்தின் மீது சூரிய ஒளி படும் போது அவரது உடலால் உயிர்ச்சத்து – டி யை உருவாக்கிக் கொள்ள முடியும். இந்த உயிர்ச்சத்து சில வகை மீன்கள், மீன் கல்லீரல் எண்ணெய்கள் மற்றும் முட்டையின் மஞ்சள் கரு, செறிவூட்டப்பட்ட பால் பொருட்கள் மற்றும் ஆரஞ்சுச் சாறு போன்ற சில உணவுகளிலும் காணப்படுகிறது.
முன்னர் குறிப்பிட்டபடி உடலில் எலும்புகளை உருவாக்கவும் அவற்றை வலுவாக வைத்திருக்கவும் வைட்டமின் – டி தேவைப்படுகிறது. வைட்டமின் – டி யின் வேலை எலும்புகளின் உருவாக்கத்திற்குக் கால்சியம், மெக்னீசியம் மற்றும் பாஸ்பேட் ஆகியவற்றை நாம் உண்ணும் உணவில் இருந்து உடல் ஈர்த்துக் கொண்டு பயன்படுத்த உதவுதலாகும். இது எலும்புகள் மற்றும் இரத்தத்தில் உள்ள கால்சியத்தின் அளவை சமன் செய்யவும் பயன்படுகிறது. நாம் போதுமான வைட்டமின் – டி எடுத்துக் கொள்ளாவிட்டால், நமது இரத்தத்தில் கால்சியத்தின் அளவு குறையும். கால்சியத்தின் நிலைகளை சமன் செய்யும் பொருட்டு நம் உடல் நமது எலும்புகளில் இருந்து கால்சியத்தை நமது இரத்தத்திற்கு இழுக்க வேண்டும். நமது நரம்பு மண்டலம், நோயெதிர்ப்பு அமைப்பு மற்றும் தசைகள் ஆகியவை எவ்வாறு செயல்படுகின்றன என்பதிலும் வைட்டமின் – டி பங்காற்றுகிறது.
வைட்டமின் – டி குறைபாடு எலும்புகளைப் பலவீனமாக்கும். மருத்துவர்கள் இந்த மருத்துவ நிலையைப் பெரியவர்களுக்கு ஆஸ்டியோபோரோசிஸ் (OSTEOPOROSIS) என்றும் குழந்தைகளுக்கு ரிக்கெட்ஸ் (RICKETS) என்றும் அழைக்கிறார்கள். இரத்தத்தில் வைட்டமின் – டி அளவுகள் குறைந்திருப்பது புற்றுநோய், இதய நோய் மற்றும் பக்கவாதம், மனச்சோர்வு, மல்டிபிள் ஸ்களீரோசிஸ், வகை 2 நீரிழிவு ஆகிய நோய்கள் தாக்கும் அபாயம் கூடுதலாக இருப்பதாகத் தொடர்பு படுத்தப்படுகிறது. வைட்டமின் – டி நிலையைத் தீர்மானிக்க, இரத்தத்தில் இருக்கும் 25 – ஹைட்ராக்ஸி வைட்டமின் – டி (25 – HYDROXYVITAMIN – D) யின் செறிவை அளவிட வேண்டும்.
மனிதர்களில் பெரும்பாலானவர்களுக்கு வேலை செய்யத் தேவைப்படும் உயிர்ச்சத்து – டி இன் குறைந்தபட்ச அளவை இரத்தத்தில் மதிப்பிடுவது சவாலான ஒன்று. இது ஒருவரது வயது, இனம் அல்லது இனத்துவம் மற்றும் மருத்துவர் பரிந்துரைக்கும் சோதனை வகை ஆகியவற்றின் அடிப்படையில் மாறுபடும் என்று நிபுணர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். தேசிய அறிவியல், பொறியியல் மற்றும் மருத்துவக் கல்விக் கூடங்களின் அங்கமான (NATIONAL ACADEMIES OF SCIENCES, ENGINEERING AND MEDICINE – NASEM) உணவு மற்றும் ஊட்டச்சத்து வாரியத்தில் பணியாற்றும் (FOOD AND NUTRITION BOARD) உள்ள நிபுணர் குழு இரத்தத்தில் ஒரு மில்லிலிட்டருக்கு 50 நானோகிராம் அல்லது அதற்கும் மேல் உயிர்ச்சத்து – டி இருந்தால் பெரும்பாலும் மிக அதிகம் என்று கொள்ளலாம். இது உடல்நலப் பிரச்சனைகளை ஏற்படுத்தலாம் என்றும்,
இதுவே ஒரு மில்லிலிட்டருக்கு 20 நானோகிராம்கள் (Nanograms) அல்லது அதற்கு மேல் அதிகமாக உயிர்ச்சத்து – டி இருப்பது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பராமரிக்கப் பெரும்பாலான ஆரோக்கியமான மனிதர்களுக்குப் போதுமானதாகக் கருதலாம். உயிர்ச்சத்து – டி ஒரு மில்லிலிட்டருக்கு 12 நானோகிராம்கள் அல்லது அதற்கும் குறைவாக இருப்பது வைட்டமின் – டி குறைபாடாகக் கருதப்படுகிறது
வைட்டமின் டி குறைபாட்டை (அ) லேசான குறைபாடு (ஆ) மிதமான குறைபாடு (இ) கடுமையான குறைபாடு என்று மூன்று வகையாகப் பிரிக்கலாம்.
ஒரு மில்லிலிட்டருக்கு 20 நானோகிராம் (20 ng/mL) குறைவாக உயிர்ச்சத்து – டி இருத்தல் லேசான குறைபாடாகவும்
ஒரு மில்லிலிட்டருக்கு 10 நானோகிராம்களுக்கும் (10 ng/mL) குறைவாக உயிர்ச்சத்து – டி இருத்தல் மிதமான குறைபாடாகவும்
ஒரு மில்லிலிட்டருக்கு 5 நானோகிராம்களுக்கும் (5 ng/mL) குறைவாக உயிர்ச்சத்து – டி இருத்தல் கடுமையான குறைபாடாகவும் வகைப்படுத்தப்படுகிறது.
குழந்தைகள் வளரும் பருவத்தில் இருப்பவர்கள் என்பதால் அவர்களின் உயிர்சத்து – டி யின் குறைபாட்டின் அறிகுறிகள்
மிகத் தெளிவாகத் தெரியும். குழந்தைகள் வளர்ந்து கொண்டிருப்பதால் அவர்களது எலும்புப் பிரச்சினைகளும் மிக அதிகமாக வெளிப்படுகின்றன. குழந்தைகளில் உயிர்சத்து – டி குறைபாட்டின் அறிகுறிகளாகப் பின்வருவவற்றைக் குறிப்பிடலாம்.
லேசான குறைபாடு இருக்கும் நேர்வில் பலவீனம், புண்கள் மற்றும் வலிமிகுந்த தசைகள் போன்ற அறிகுறிகள் காணப்படும். இவற்றுடன் வில் போல வளைந்த எலும்புகளின் காரணமாக தவறான வளர்ச்சி தசை பலவீனம், எலும்பு வலி, மூட்டு உருக்குலைவு ஆகிய அறிகுறிகளையும் குறிப்பிடலாம். பெரியவர்களில் அறிகுறிகள் குறைவாகவே காணப்படுகின்றன, சோர்வு, எலும்பு மற்றும் மூட்டு வலி (குறிப்பாக முதுகுப் பகுதியில்), எலும்பு இழப்பு, தசைப் பலவீனம், வலிகள் அல்லது பிடிப்புகள், மனச்சோர்வு போன்ற மனநிலை மாற்றங்கள் ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.
வைட்டமின் டி குறைபாடு பல காரணங்களால் ஏற்படலாம்.
மிகத் தீவிரமாகச் சைவ உணவைப் பின்பற்றிவருபவர்களுக்கு உணவிலிருந்து போதுமான உயிர்ச்சத்து – டி கிடைக்காது. இத்தகைய நேர்வில் வைட்டமின் – டி குறைபாடு ஏற்படலாம். உயிர்ச்சத்து – டி யைக் கொண்டுள்ள உணவு ஆதாரங்கள் பெரும்பாலும் விலங்குகள் சார்ந்தவையாகவே அமைந்துள்ளன,
அசைவ உணவுகளில் கொழுப்பு நிறைந்த மீன்கள், குறிப்பாக ட்ரவுட், சால்மன், சூரை மற்றும் கானாங்கெளுத்தி ஆகியன, மீன் கல்லீரல் எண்ணெய்கள், முட்டையின் மஞ்சள் கரு, மாட்டிறைச்சியில் அதன் கல்லீரல் ஆகியவையும் தாவர உணவுகளில் சிலவகைக் காளான்கள், பாலாடைக்கட்டி, செறிவூட்டப்பட்ட உணவுகள் பால், சோயா பால் போன்ற தாவரப்பால் மாற்றுகள் மற்றும் காலை உணவுத் தானியங்கள் போன்றவையும் உயிர்ச்சத்து – டி யைக் கொண்டுள்ளன.
உடலின் மீது போதிய அளவுக்குச் சூரிய ஒளிபடவில்லை என்றாலும் உயிர்ச்சத்து – டி குறைபாடு ஏற்படும். நாள்தோறும் முகம், கைகள், புயங்கள் மற்றும் கால்கள் மீது சுமார் 5 முதல் 30 நிமிடங்கள் சூரிய ஒளி படும் போது நமது உடல் வைட்டமின் – D யைத் தானாகவே உருவாக்கிக் கொள்கிறது. அதிக நேரம் சூரிய ஒளி படாமல் வீட்டிற்குள்ளேயே உள்ளேயே தங்கியிருப்பவர்கள், வடக்கத்திய தட்பவெப்ப நிலையில்
(NORTHERN CLIMATE) வாழ்பவர்கள் அல்லது வெளியே செல்லும் போதெல்லாம் மேனியில் நேரடியாகச் சூரிய ஒளி படாமல் திரையிட்டு மறைக்கும் (SUN SCREEN) சாதனங்களைப் பயன்படுத்துபவர்கள் ஆகியோருக்கு உயிர்ச்சத்து – டி குறைபாடு ஏற்படும் அபாயம் உள்ளது. குளிர்காலத்தில் சூரிய ஒளி குறைவாக இருக்கும் போதும், வீட்டிற்கு வெளியே (OUTDOORS) குறைந்த நேரத்தைச் செலவிடும் போதும் பலர் வைட்டமின் – டி குறைபாட்டிற்கு ஆளாகின்றனர்.
மனிதத் தோலை கருமையாக்கும் நிறமி மெலனின்(MELANIN) என்று அழைக்கப்படுகிறது. இது சூரிய ஒளியிலிருந்து வெளிப்படும் புற ஊதா – B கதிர்களிலிருந்து (UV – B) நம்மைப் பாதுகாக்க உதவுகிறது, ஆனால் சூரிய ஒளி சருமத்தில் படும் போது வைட்டமின் D ஐ உருவாக்கும் உங்கள் சருமத்தின் திறனையும் இது தடுக்கக் கூடும் என்பதால் கருமையான சருமம் உள்ளவர்களுக்கு, வெளிரிய சருமம் உள்ளவர்களைக் காட்டிலும் சூரிய ஒளியில் இருந்து குறைவான அளவிலேயே உயிர்ச்சத்து – டியைப் பெறும் வாய்ப்புள்ளது.
உயிர்ச்சத்து – டி, இருவகையான வடிவங்களைக் கொண்டுள்ளது. அவை செயலற்ற வடிவம் (INACTIVE FORM)) மற்றும் உங்கள் உடல் பயன்படுத்தக்கூடிய செயல்படும் வடிவம் (ACIVE FORM) எனப்படுகின்றன.நமது உடலில் சிறுநீரகங்களிலும், கல்லீரலிலும் செயலற்ற வடிவத்தை செயல்படும் வடிவமாக மாற்றும் நொதிகள் (ENZYMES) உள்ளன. சிறுநீரகம் மற்றும் கல்லீரல் நோய்கள் காரணமாக உடல் உருவாக்கும் இந்த நொதிகளின் அளவு குறையக் கூடும், இது வைட்டமின் – டி குறைபாட்டின் அபாயத்தை அதிகரிக்கும்.
உண்ணும் உணவில் இருந்து வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்களைக் குடல் உறிஞ்சுவதைக் கிரோன் நோய் (CROHN’S DISEASE), நீர்மத் திசுவழற்சி (CYSTIC FIBROSIS) மற்றும் செலியாக் நோய் (CELIAC DISEASE) ஆகியன கடினமாக்குகின்றன. λ