ச .நாகராஜன்
வந்து விட்டது மருத்துவ ஏஐ!
நாளுக்கு நாள் வேகமாக முன்னேறி வரும் உலகில் இப்போது பரபரப்பை ஊட்டும் ஒரு புதிய நவீன தொழில்நுட்பம் செயற்கை நுண்ணறிவு எனப்படும் ARTIFICIAL INTELLIGENCE ஆகும் இதை சுருக்கமாக AI என்கிறோம். இது மருத்துவ உலகிலும் பயன்பாட்டிற்கு வந்து விட்டது. இதை HEALTHCARE AI என்கிறோம்.
ஹெல்த்கேர் ஏஐ என்றால் என்ன?
கணினியில் மனித அறிவுக்கு ஈடாக ஒரு விஷயத்தைப் பகுத்தாராய்ந்து ஏற்கனவே தனக்குக் கொடுக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் முடிவைத் தந்து சிகிச்சையை மேற்கொள்ள உதவும் ஒரு கணினி இயந்திர உத்தியே ஆர்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் எனலாம்.
இது சாபமா, அல்லது வரமா?
வரம் தான்!
வரம் தான் என்பதைக் கீழே உள்ள ஆதாயங்களால் அறிகிறோம்,
அதிகமான தரவுகள் கிடைக்கப்பெறுவதால் சிகிச்சை முறைகள் எளிமைப்படுத்தப்படுகின்றன.
நல்ல சிகிச்சை முறை நோயாளிக்குக் கிடைக்கிறது.
மருத்துவ செலவு கணிசமாகக் குறைகிறது.
ரேடியாலஜிஸ்டுகளுக்கு சமமாக சிகிச்சை சம்பந்தமான ஸ்க்ரீன் அறிக்கைகள் தயாராகின்றன.
திரும்பவும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது வெகுவாகக் குறைகிறது.
ஆரம்ப சிகிச்சையில் அதிக கவனம் உண்டாகிறது.
இறப்பு விகிதம் குறைகிறது.
நோயாளிக்குத் தகுந்தபடி சிகிச்சைத் திட்டம் அவரது இருப்பிடத்தையே சென்றடைகிறது. மருத்துவமனைச் செலவுகள் குறைகின்றன.
பக்கவாத நோயால் தாக்குண்டவர்களுக்கு உணர்ச்சி போய் விடுகிறது. ஏஐ மூலம் அவர்களின் தொடு உணர்ச்சி மீட்கப்பட்டிருக்கிறது. ஆகவே இது போன்ற ஆக்கபூர்வமான வழிமுறைகளை உலகம் வரவேற்கிறது.
வெள்ளம் பூகம்பம் போன்ற பேரிடர் காலங்களில் விபத்தில் சிக்கியுள்ளோரை மீட்பது என்பது சுலபமான காரியம் இல்லை. ட்ரோன்கள் போன்ற நவீன சாதனங்கள் கூட இடிபாடுகளில் சிக்கியோரை பற்றிச் சரியாகக் கண்டுபிடிக்க முடிவதில்லை. ஆனால் ஏஐ இரண்டே இரண்டு மணி நேரத்தில் இடிபாடுகளின் அடியில் சிக்கி இருப்பவர்களைச் சுட்டிக் காட்டி விடுகிறது. உடனடியாக மீட்பு நடவடிக்கையை மேற்கொண்டு அவர்கள் காப்பாற்றப்படுகின்றனர்! ஆகவே ஏஐ பயன்பாடு ஒரு வரம் தான்!
சாபமா?
இது ஒரு சாபமாக ஆகி விடுமோ என்று பயப்படுபவர்கள் கீழ்க்கண்ட அபாயங்களைச் சுட்டிக் காட்டுகின்றனர்.
இன்ஷூரன்ஸ் கம்பெனிகள் தங்களது கட்டணத்தை வெகுவாக உயர்த்திவிடக் கூடும்.
ஏஐ மூலம் செயல்படும் உதவியாளர்கள் ஏஐ சாதனங்கள் தரும் தரவுகளை நம்பியே முற்றிலுமாகச் செயல்படுவர். தரவுகள் சிறிது தப்பாக இருந்தாலும் நோயாளி அபாயத்தின் உச்சத்தை அடைவார்.
தனிப்பட்ட ஒவ்வொரு நோயாளிக்கும் சிகிச்சை அளிப்பது சிக்கலான ஒன்று. அந்த நோயாளி பற்றிய கடந்த கால, நிகழ்கால அறிவு முற்றிலும் இதற்கு அவசியம். அவை அனைத்தையும் அலசி ஆராய்ந்து முக்கிய முடிவை எடுக்க வேண்டும். இது ஏஐக்கு சாத்தியமானதா?
கண்ணுக்கு நேரே எதிரே இல்லாத ஒரு மருத்துவ அறிவுரையை மெஷின் தர, அதன் அடிப்படையில் சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. ஏராளமான அன்றாட மேம்பாடுகள், மருத்துவ உத்திகள், மருந்துகள் இவை அனைத்தும் செயற்கை நுண்ணறிவு சாதனங்களில் அன்றாடம் அப்-டேட் செய்யப்பட வேண்டும்.
பிரம்மாண்டமான ஜனத்தொகை, மிகப் பெரிய அளவிலான தரவுகள் ஆகியவற்றை அவ்வப்பொழுது பெறப்படுவதன் அடிப்படையில் உதவியாளர்களுக்குப் பயிற்சி அவசியம்.
சைபர் கிரைம் உலகம்
இப்போதைய உலகம் பற்றி நாம் நன்கு அறிவோம். சைபர் க்ரைம் என்று ஒரு தனிப்பிரிவே உண்டாகி விட்டது. மருத்துவ தரவுகளைத் திருடுவது, அதன் அடிப்படையில் தவறான தகவல்களைக் காண்பித்து பயமுறுத்திப் பணம் பறிப்பது, தரவுகள் தவறான குற்றம் புரிவோரின் கையில் சிக்கி நோயாளி ஆபத்திற்குள்ளாவது போன்ற இன்ன பிற அபாயங்களைத் தடுக்க வழி வகை இதுவரை இல்லை.
இனி ஏற்படுத்த வேண்டுமானால் அது மிகப் பெரிய காரியம்.
இதில் சைபர் க்ரைம் என்ற அம்சம் மிக முக்கியமானதாக ஆகிறது.
இப்போது ஒவ்வொரு நோயாளியும் அவ்வப்பொழுது பல்வேறு சோதனைகளை மேற்கொள்கிறார். டாக்டர்கள் அந்த சோதனைகளின் அடிப்படையில் அன்றாட மருத்துவ ப்ரிஸ்கிரிப்ஷனைத் தருகிறார். நோயாளியின் அனைத்து சோதனைகளையும் ஏஐ கையாள வேண்டும்.
கம்ப்யூட்டர் அட்டாக் எனப்படும் கணினியின் மீதான தாக்குதல்கள் இப்போது அதிகமாகி வருகின்றன. பல்வேறு புரோகிராம்களில் தவறுகள் ஏற்படுகின்றன. பல மென்பொருள்கள் எனப்படும் சாஃப்ட்வேர்கள் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன.
ஏஐ இந்தத் தவறுகளை பதினைந்தே நிமிடங்களில் இனம் கண்டு மருத்துவர்களுக்கு உதவி புரிகின்றன என்றாலும் இதையும் தவறாகப் பயன்படுத்துவோரை யார் கண்காணிப்பது?
சமீபத்திய திரைப்படத்தில் கூட ஒரு காட்சி இடம் பெறுகிறது. டாக்டர் ஒருவர் தனது பயிற்சியில்லாத நர்ஸிடம் கூகிளைப் பார்த்துக் கொண்டே ஆபரேஷன் செய் என்று சொல்லி விட்டு தனது ‘ஃபேவரைட் கேமை’ விளையாடப் போய்விடுகிறார். நர்ஸ் முழிக்கிறார்.
டாக்டர்களே முக்கியம்!
ஆக ஏஐ வரமா, சாபமா என்பதை நிர்ணயிக்க நோயாளிகளிடம் ஒரு சர்வே எடுக்கப்பட்டது.
அதில் பங்கு கொண்ட அனைவரும் ஏஐ ஒரு வரம் தான் என்று உறுதிபடச் சொல்கின்றனர். கூடவே அவர்கள் சொல்வது எது எப்படியானாலும் டாக்டரின் முடிவே இறுதியானது. அவரையே நாங்கள் நம்புகிறோம் என்கின்றனர்.
கூகிளின் ஒரு ஆய்வுத் திட்டத்தில் ரொபாட் ஒன்று தன்னிச்சையாக முடிவை எடுத்ததைக் கண்ட ஆய்வாளர்கள் திடுக்கிட்டனர். கொடுக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையைத் தாண்டி ஒரு ரொபாட் தானாகவே ஒரு முடிவை எடுத்தால் என்ன ஆகும்? கூகில் இந்த ஆய்வுத் திட்டத்தை அத்தோடு முடித்துக் கொண்டு விட்டது. எல்லா ரொபாட்டுகளும் செயற்கை நுண்ணறிவு மூலம் மனித குலத்திற்கு போட்டியாகி எதிரிகளாகி விட்டால், மனித குலம் என்ன ஆவது?
பிரபல விஞ்ஞானியான ஸ்டீபன் ஹாகிங், “செயற்கை நுண்ணறிவு மனித குலத்தையே அழித்து விடும்” என்று பயங்கர எச்சரிக்கையை விடுத்திருப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
மருத்துவ உலகில் செயற்கை நுண்ணறிவை வெற்றிகரமான ஒன்றாக ஆக்குவது டாக்டர்கள் கையிலும் நோயாளிகள் கையிலுமே தான் இருக்கிறது என்பதே உண்மை.
ஏஐ வரமா அல்லது சாபமா?
காலம் பதில் சொல்லும்! λ