பேரீச்சம்பழங்கள் தரும் அற்புத ஆரோக்கியம்!

ச.நாகராஜன்

 

நாள் ஒன்றுக்கு மூன்றே மூன்று பேரீச்சம்பழங்கள்

ஒரு நாளைக்கு மூன்று பேரீச்சம்பழங்கள் வீதம் ஒரு வாரம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தாலே உங்களின் ஆரோக்கியம் வெகுவாக மேம்பட்டு விடும் என்கிறது சமீபத்திய ஆய்வுகள். தொடர்ந்து சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள் வந்து சேரும் என்பதை எண்ணிப் பார்த்தால் எவ்வளவு உற்சாகம் ஏற்படுகிறது!

பேரீச்சம்பழங்கள் நல்கும் பயன்கள் யாவை? இதோ படியுங்கள்:

குடல் கேன்ஸர் வராது தடுக்கும்

ஜீரண அமைப்பில் நாம் சாப்பிடும் உணவு சரியாகச் செல்வதை உறுதி செய்வதோடு பேரீச்சம்பழங்கள் குடல்நாளம் (Gut) நன்கு இயங்குவதையும் உறுதி செய்கிறது. அத்துடன் அவை சரியாக இயங்குவதால் பெருங்குடலில் (colon)  கேன்ஸர் வருவதற்கான அபாயத்தைக் குறைக்கிறது.

அமெரிக்க உணவு மற்றும் சத்துணவு விஞ்ஞானப் பிரிவு (Department of Food and Nutritional Sciences) சமீபத்தில் நடத்திய ஆய்வு ஒன்றில் பேரீச்சம்பழங்கள் சாப்பிடுவோரின் குடல் ஆரோக்கியம் வெகுவாக மேம்படுவதைத் தெரிவித்துள்ளது. பெருங்குடலில் கேன்ஸர் வருவதற்கான திசுக்களை உருவாகவிடாமல் செய்ய நல்ல பாக்டீரியாக்கள் அங்கு சேர்கின்றன.

உடனடி சக்தி சேரும் அது நீடித்தும் இருக்கும்

அடுத்து பேரீச்சம்பழத்தில் உள்ள இனிப்புச் சத்து, குளுகோஸ், ப்ரக்டோஸ், சக்ரோஸ் (Sugars, Glucose, Fructose and Surcose)  ஆகியவை உடனடியாக சக்தியைத் தருகிறது. அத்துடன் சக்தியைத் தருவதாக விளம்பரங்கள் கூறும் குளிர்பானங்கள் அல்லது எனர்ஜி பார் போலல்லாமல்  பேரீச்சம்பழங்களில் உள்ள பைபர் சத்து, பொட்டாசியம், மக்னீஷியம் விடமின்கள், ஆன்டி ஆக்ஸிடென்டுகள் உள்ளிட்டவை உங்கள் சக்தியை அப்படியே நீடித்து நிலை நிறுத்துவதோடு, ஏனையவை போல் திடீரெனக் குறைந்து உங்களைச் சோர்வடையச் செய்யாது.

 மலச்சிக்கல் பிரச்சினை தீரும்

      உங்கள் ஜீரண அமைப்பில் சாப்பிட்ட உணவுகள் மெதுவாக அழகாக சீராகச் செல்ல வேண்டும் என நீங்கள் விரும்பினால் அதை அடைய பேரீச்சம்பழங்கள் உதவும். ஒரு கப் பேரீச்சம்பழங்களில் 12 கிராம் பைபர் உள்ளது. இது நீங்கள் அன்றாடம் எடுக்க வேண்டிய பைபரில் 48 சதவிகிதம் ஆகும்.

சரியான பைபரை சரியானபடி சாப்பிட்டாலேயே மலச்சிக்கல் வராது; சரியானபடி மலம் வெளியே போக உதவும் இயக்கங்கள் சீராகும். இதைச் செய்ய உதவுவது பேரீச்சம்பழங்களே. பிரிட்டிஷ் ஜர்னல் ஆஃப் நியூட்ரிஷன் பிரசுரித்துள்ள ஆய்வறிக்கை ஒன்று ஒரு நாளைக்கு 7 பேரீச்சம்பழங்கள் வீதம் 21 நாட்கள் யார் ஒருவர் சாப்பிடுகிறரோ அவருக்கு மலச்சிக்கல் பிரச்சினை வருவதே இல்லை என்றும் மலம் போவது சீராக இருக்கும் என்றும் தெரிவிக்கிறது.

மூளை செயல்திறன் கூடும்; மனச்சோர்வு ஏற்படாது!     

பேரீச்சம்பழங்களில் விடமின் பி6 (Vitamin B6) இருப்பதால் செரொடோனின் மற்றும் நோரிபினப்ரைன் (erotonin and norepinephrine) ஆகியவை உடலில் உருவாகி மூளையின் செயல்திறன் கூடுகிறது. செரோடோனின் மூட் எனப்படும் மனநிலையைச் சீராக வைக்கிறது. நோரிபினப்ரைன் மன அழுத்தத்தைச் சீராக்குகிறது. ஆய்வுகள் விடமின் பி 6 குறைவாக இருந்தாலோ மனச்சோர்வு ஏற்படும் என்று தெரிவிக்கின்றன. ஆகவே உங்கள் மன அழுத்தம் சீராக இருந்து உங்கள் ‘மூடும் சரியாக இருக்கும் போது மூளை கூர்மையாக இயங்குகிறது. தகவல்களை நன்கு உள்வாங்கிச் சேர்த்து வைத்துக் கொள்கிறது.

 

ஆசனவாய் வீக்கம் வராது    

ஹெமொராய்ட்ஸ் (Hemorrhoids) என்பவை ஆசனவாயிலும் குதத்திலும் உள்ள நரம்புகளாகும். மலச்சிக்கலால் இவை வீக்கமடைந்து வீங்கி இருக்கும். மலச்சிக்கல் இங்கு அழுத்தத்தைத் தர ஜீரண மண்டலத்தின் கோடியில் உள்ள பகுதியில் கூட இந்த அழுத்தம் ஏற்படும். இது வலியைத் தரும் ஒரு நிலை. இதை நல்ல உணவுப் பழக்கத்தால் மாற்றி மலச்சிக்கல் ஏற்படுவதையே தடுத்து விடலாம்.

பல டாக்டர்களும் பைபர் அதிகம் இருக்கும்படியான உணவை எடுக்க வேண்டும் என்று பரிந்துரை செய்கின்றனர். பேரீச்சம்பழங்கள் உங்கள் ஹெமொராய்ட்ஸ் வீக்கத்தை ( அது இருப்பின்) சரி செய்து விடும்.

மனம் உடைந்து விட்ட நிலையில் அதைப் போக்கும்; உற்சாகம் தரும்!   

மனம் உடைந்து விட்ட நிலையில் உதவிக்கு வருவது பேரீச்சம்பழங்கள் தாம்.  ஆம், இது உண்மை! இதில் உள்ள பொட்டாசியம் கெட்ட கொலஸ்ட்ராலான எல்டிஎல் கொலஸ்ட்ராலைக் குறைக்கிறது. கெட்ட கொலஸ்ட்ரால் குருதிக் குழாய்களில் அடைப்பை ஏற்படுத்தி மாரடைப்புக்கு வழி வகுக்கிறது. வயதான பெண்மணிகளிடம் எடுக்கப்பட்ட ஆய்வு ஒன்றில் அதிக பொட்டாசியமானது ஸ்ட்ரோக்கைக் குறைப்பது  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அத்துடன்  மூளை நரம்புகள் சுருங்குவதால் ஏற்படும்  ischemic Stroke ஐயும் தடுக்கிறது.        

 

 நலம் தரும் பேரீச்சம்ழங்களை உண்ணுங்கள்!

ஆகவே அதிகம் விலை இல்லாத, எங்கும் எப்பொழுதும் கிடைக்கக் கூடிய நல்ல பேரீச்சம்பழங்களை வாங்கி உண்ணுங்கள். அபாயகரமான வியாதிகள் வருவதைத் தடுத்து உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ளுங்கள்.

****

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here