புத்தாண்டு 2018இல் உடல் ஆரோக்கியம் மேம்பட அர்த்தமுள்ள சில குறிப்புகள்!

ச.நாகராஜன்

1

2018ஆம் ஆண்டு பிறந்து விட்டது.போனதெல்லாம் போகட்டும், புதிதாக நல்ல பழக்க வழக்கங்களை மேற்கொள்வோம் என்று உறுதி பூணுவது இயல்பு.

முதலில் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தச் செய்ய வேண்டிய வழிமுறைகளை அறிந்து கொண்டு அவற்றை முழுமனதுடன் கடைப்பிடிப்போம்.

உடல் வலுவானால் மனம் வலுவடையும்.

மனம் வலுவடைந்தால் சிந்தனை சீரடையும்.

சிந்தனை சீரடைந்தால் சிறப்பான யோசனைகள் பிறக்கும்.

சிறப்பான யோசனைகள் பிறந்தால் சிறப்பான செயல்முறைகள் பிறக்கும்.

சிறப்பான செயல்முறைகள் பிறந்தால் செல்வம் கொழிக்கும்.

செல்வம் கொழித்தால் சமுதாயம் உயரும்.

சமுதாயம் உயர்ந்தால் வாழ்க்கையின் அர்த்தம் புரியும்.

ஆகவே உடல் நல மேம்பாட்டிற்கான ஆலோசனைகளைத் தெரிந்து கொண்டு அவற்றைக் கடைப்பிடிப்போம்.

2

காலையில் எழுந்தவுடன் நீட்சிப் பயிற்சிகளைச் (Stretching Exercises) செய்யுங்கள். அது ரத்த ஓட்டத்தைச் சீராக்கும். ஜீரணத்தை அதிகரிக்கும். முதுகு வலியைப் போக்கும்.

நிச்சயமாக நல்ல காலை உணவை உண்ணுங்கள். எந்தக் காரணம் கொண்டும் அதைத் தவிர்க்காதீர்கள். உயர்ந்த நார்ச்சத்துள்ள உணவு வகைகள், பழச்சாறு, குறைந்த கொழுப்புச் சத்து உள்ள பால் நலம்.

பல் துலக்கல் ஒரு கலை. பலருக்கும் அது சரிவரத் தெரிவதில்லை. நல்ல முறையில் பல் துலக்கி, கொப்பளியுங்கள். பென்சிலை எப்படிப் பிடிப்பீர்களோ அப்படியே தான் பிரஷைப் பிடிக்க வேண்டும். இரண்டு நிமிடமாவது பற்களைத் துலக்க வேண்டும். பல் நலனைப் பற்றிய சந்தேகம் எழுந்தால் ஒரு பல் மருத்துவரைக் கலந்தாலோசியுங்கள்.

மனம் ஆற்றல் பெற இப்போதைய நடைமுறையானநியூரோபிக்ஸைசெய்யுங்கள். இது மூளை சர்க்ட்யூட்டுகளை வலுவூட்டிப் பாதுகாக்கும்

பிரார்த்தனையை மறக்காதீர்கள். அறிவியல் ஆமோதிக்கும் ஒரு வழிமுறை தான் பிரார்த்தனை.

உள்ளிப்பூண்டு, வெங்காயம் முதலியவை நல்ல சத்தைக் கொண்டிருப்பதால் அதை உணவில் சேருங்கள்.

சிகரட் புகைப்பதை விட்டு விடுங்கள்.

கால்சியம் அளவு சரியாக எடுத்துக் கொள்ளப்படுகிறதா எனச் சரிபாருங்கள். முப்பது வயதிற்குப் பின்னர் எலும்பின் அடர்த்தி குறைய ஆரம்பிக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். 200 மில்லிகிராம் அன்றாடம் தேவை. அதுவும் மக்னீஷியத்துடன் எடுத்துக் கொள்ள வேண்டும்.

சூடான, காரமுள்ள உணவு வகைகள் எண்டார்பின்களை தூண்டி விட்டு ஒரு நல்ல உணர்வை ஏற்படுத்தும்.

தக்காளி ஒரு சூப்பர் ஸ்டார். கான்ஸரை எதிர்கொள்ளும் சக்தி வாய்ந்த லிகோபென்னை அது கொண்டுள்ளது. விடமின் சி உள்ளது. சமைக்கப்பட்ட தக்காளியும் அதே சத்தைக் கொண்டிருக்கும் என்பது சுவையான செய்தி. தக்காளி ஆஸ்த்மாவைக் குறைக்கும். நுரையீரல் நோய்களைப் போக்கும்.

குறைந்த இரத்த சுகர் அளவு இருக்கக் கூடாது. ஆகவே சீரான, குறைந்த அளவு உணவை எடுத்துக் கொள்ளுங்கள். மூலிகை தேநீர் நன்கு உதவும்.

ஒரு நாளைக்கு 90 எம்ஜி அளவு விடமின் சி தேவை. இதைப் பெற ஐந்து முறை ப்ரஷ் ஜூஸ் (Fresh Juice) சாப்பிட வேண்டும்.

விடமின் நோய் எதிர்ப்புச் சக்தியை உருவாக்கும். பால்வகை உணவுகள், மாங்காய், மிளகாய் உள்ளிட்ட போன்றவற்றில் விடமின் உள்ளது.

உடல்பயிற்சியின் போது எனர்ஜி பானங்கள் வேண்டாம். சுத்த நீரைப் பருகினால் போதும்.

பரபரப்பு வேண்டாம். அடிப்படை விஷயங்களில கவனம் செலுத்துங்கள். பரபரப்பை விட்டு விட்டு நிதானமாக வேலை செய்யுங்கள்.

சிரிக்க மறக்காதீர்கள். தினசரி மனம் விட்டுச் சிரிப்பது உடல் நோய்களையும் மன நோய்களையும் போக்கும்.

உலகில் இன்று டைப்2 டயபடீஸ் கொண்டுள்ளவர்கள் அதிகம். மாரடைப்பு அபாயம் இதனால் உண்டு. ஆகவே உங்கள் குளுகோஸ் அளவுகளை அவ்வப்பொழுது சரி பார்த்துக் கொள்ள மறக்காதீர்கள்.

டயட்டில் இருக்கிறேன் என்று சொல்லாதீர்கள். மாறாக சீரான உணவுப் பழக்கங்களை நீண்ட காலத் திட்டத்தின் அடிப்படையில் மேற்கொள்ளுங்கள்.

மது பானம் வேண்டாம்.

உப்பை உணவில் அதிகம் சேர்க்காதீர்கள். தினசரி நாம் சேர்க்க வேண்டிய உப்பின் அளவு 5-6கிராம் மட்டுமே.

1.5 லிட்டர் நீரை தினமும் அருந்த மறக்காதீர்கள்

இறுக்கமான உடை வேண்டாம். சாதாரணமாக உங்கள் நரையீரலின் கீழ்ப்பகுதிகளும் உதரவிதானமும் மேலும் கீழும் அசையும். இறுக்க உடை உங்கள் நுரையீரலின் மேல் பாகத்தில் மட்டுமே சுவாசிப்பதை ஏற்படுத்தும். இது தோள்களில் டென்ஷனை ஏற்படுத்தும். சுவாசிப்பதையும் கஷ்டமாக்கும்.

அதிகச் சுமையுள்ள ஹாண்ட் பேக்கைத் தோளில் சுமக்காதீர்கள.

மார்புப் பகுதியை  முன்னே வையுங்கள். தோள்களைப் பின்னே கொண்டு செல்லுங்கள். நேராக நில்லுங்கள். நன்றாக நடை பயிலக் கற்றுக் கொள்ளுங்கள். சரியான உடல் இருக்கை நிலையைக் கைக்கொள்ளுங்கள். அந்தப் பழக்கம் வாழ் நாள் முழுவதும் நீடிக்கும்.

இன்னும் இது போன்ற நிரூபிக்கப்பட்ட நல்ல ஆரோக்கிய மேம்பாட்டுக் குறிப்புகளைச் சேர்ப்பதைப் பழக்கமாகக் கொண்டு அதை அப்படியே அமுல் படுத்துங்கள்.

பிறகென்ன, ஹெல்தி, ஹாப்பி லைஃப் தான்!

ஹாப்பி 2018!

மேலும் பற்பல ஆரோக்கிய ஆண்டுகளைப் பார்க்க வாழ்த்துக்கள்!

****

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here