கடற்பஞ்சு

0
26
வாழ நினைத்தால் வாழலாம்….வழியா இல்லை பூமியில்….

நாம் வசிக்கின்ற இந்த பூமியில் எண்ணிலடங்கா ஜீவராசிகள் நம்முடன் வசிக்கின்றன.நம்முடைய உடலமைப்பை விட மிகவும் சிக்கலான அதேசமயம் புரிந்து கொள்ளமுடியாத வகையில் இறைவன் அனேக உயிர்களைப் படைத்து உள்ளார்.அந்த வகையில் கண்ணுக்குத்தெரிந்த பக்கத்து வீட்டுக்காரரை சற்றே மறந்துவிட்டு கடலில் வாழும் ஒரு ஜீவராசியைப் பற்றிக் காண்போம்.

கடற்பஞ்சு

கடற்பஞ்சுகள் ஒரு தாவரத்தைப் போல் இருந்தாலும் அவையும் ஒரு விலங்கே என்று அரிஸ்டாட்டில் சொல்கிறார். கடலெங்கிலும்,சில ஏரிகளிலும் சுமார் 15,000 வகைகள் வாழ்வதாக அறிஞர்கள் சொல்கின்றனர்.சில வகையான கடற்பஞ்சுகள் 100 வயசு வரை வாழ்ந்து மனிதனைப் பொறாமைப் பட வைக்கிறது.

மற்ற விலங்குகள் போல் இவற்றிற்கு மூளை,இதயம்,நரம்பு மண்டலம் போன்ற உடல் உள்ளுறுப்புகள் கிடையாது.மூளை இல்லாம அப்ப எப்படி உயிர் வாழும் என்று நீங்கள் உங்கள் மூளை நியூரான்களைப் பார்த்துக் கேட்கக்கூடாது.

கடற்பஞ்சின் உடலில் இறைவன் சில விசேசமான செல்களைக் கொடுத்து உள்ளார்.அவை தான் இதற்கு தோலும்,நார் போன்ற எலும்புக்கூடும் உருவாவதற்கு உதவி செய்கிறது.மேலும் உணவு அளிப்பது,கழிவுகளை வெளியேற்றுவது,ஊட்டச்சத்துகளைக் கடத்துவது என்று செல்களின் உதவி கொண்டே உயிர் வாழ்கிறது.

இரண்டு கடற்பஞ்சை ஒன்றாகப் போட்டு அரைத்துவிட்டால் என்னவாகும்?

கொஞ்ச நேரத்தில் அதன் செல்கள் தனியாகப் பிரிந்து, பழைய மாதிரியே  இரண்டு கடற்பஞ்சாகி விடும். உலகிலுள்ள வேறெந்த தாவரமோ விலங்கோ கடற்பஞ்சைபோல் தன்னைத்தானே உயிர்பித்துக்கொள்ள முடியாது” என்று நேஷனல் ஜியோக்கிராஃபிக் நியூஸ் சொல்கிறது.

கடற்பஞ்சுகள் மலைக்க வைக்கும் விதத்தில் இனவிருத்தி செய்கின்றன. அதற்காக, சில கடற்பஞ்சுகள் விசேஷ செல்களை வேறு இடங்களுக்கு அனுப்பி வைக்கின்றன. சிலகாலம் செயல்படாமல் இருக்கும் அந்தச் செல்கள், பொருத்தமான இடத்தைக் கண்டுபிடித்தவுடன் மறுபடியும் செயல்படத் துவங்கி புதிய கடற்பஞ்சுகளாக உருவெடுக்கின்றன. வேறு சில கடற்பஞ்சுகள், இணைசேருவதன் மூலம் இனவிருத்தி செய்கின்றன. தேவைக்கு ஏற்றாற்போல் இவை ஆண் செல்லாக அல்லது பெண் செல்லாக மாறிக்கொள்கின்றன. இன்னும் சில கடற்பஞ்சுகளோ முட்டை இடுகின்றன. நாம் நுணுக்கமாக ஆராய ஆராய, மிகமிக எளிய ஜீவராசிகளில்கூட படுசிக்கலான வடிவமைப்பைக் காண்கிறோம்என்கிறார் பால் மோரிஸ் என்ற எழுத்தாளர்.

இதயம்,மூளை,நரம்பு மண்டலம் எனப் பல கோடி செல்கள் உதவியுடன் வாழும் நம்மில் சிலர் வாழ முடியவில்லை என்று சொல்வதைக் கேட்கும்போது, எந்தச் சூழலிலும் வாழும் கடற்பாசியின் வாழ்வைப் படியுங்கள் என்றே சொல்லத் தோன்றுகிறது.

வாழ்வில் நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கையுடனே வாழ்வோம்.

ஆசிரியர்,editor@tamilhealthcare.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here