நமது நரம்பு மண்டலம்

0
17
மது கபாலத்தில் இருந்து கால் வரை தகவல்களைப் பறிமாறிக்கொண்டு இருப்பது நரம்பு செல்கள். நமது உடலின் ஐம்பொறிகளான கண், காது, மூக்கு, வாய், தோல் என்பவற்றிலிருந்து வருகின்ற நரம்புகள் நேரடியாகவோ தண்டுவடத்தினூடாகவோ பெருமூளையுடன் இணைக்கப்பட்டுள்ளன. மூளையின் மிக முக்கியமான பகுதி முகுளம்.மூளையின் கீழ்ப் பகுதியிலே அமைந்திருக்கும் முகுளம், மூளையின் பகுதிகளிலே, சிறியதாகவும் இருக்கிறது. இந்த இடத்தில்தான் தண்டுவடமானது (முண்ணாண்) மூளையுடன் இணைகின்றது. இதிலிருந்து தொடங்குகிற நரம்புகள், இதயம், நுரையீரல், இரைப்பை, குடல் போன்ற முக்கியமான உறுப்புக்களுடன் இணைந்திருக்கின்றன. முகுளத்திற்கு இரண்டு பணிகள் உண்டு.
* அனிச்சைச் செயல் * நரம்பு உந்துதல்ளை கடத்துதல்
சுவாச வேலைகள், ஜீரணமாகுதல், இதயத்துடிப்பு போன்ற காரியங்கள் எல்லாம், யாருடைய விருப்பத்திற்கும் இன்றி, தானாகவே இடம்பெறுகின்ற தன்னிச்சைச் செயல்களாகும். இப்படிப்பட்ட தன்னிச்சையாக இயங்குகிற தானியங்கும் தசைகளுக்கு, முகுளத்திலிருந்துதான் கட்டளைகள் கிடைக்கின்றன. முகுளமானது, மத்திய நரம்பு மண்டலத்தின் ஜீவாதார முக்கியத்துவம் கொண்ட உறுப்பாகும். முகுளத்தில் கோளாறுகள் ஏற்பட்டால், மூச்சு விடலும், இதயத்துடிப்பும் தடைப்பட்டுப்போய், மரணமே நிகழலாம்.

அடுத்தது தண்டுவடம்.இந்தத் தண்டுவடமானது, முகுளத்திலிருந்து கிளம்பி, முதுகெலும்பின் நடுவிலுள்ள முள்ளெலும்புக் கால்வாய் வழியாகக் கீழ்நோக்கிச் செல்கிறது. 31 ஜோடி முதுகுத்தண்டு நரம்புகள், தண்டுவடத்திலிருந்து கிளம்பி, தேகத்திலுள்ள தசைகள் மற்றும் தோல் முதலிய எல்லா உறுப்புகளுக்கும் செல்கின்றன.

எந்த ஒரு மின்னணுப் பொருட்களை எடுத்தாலும் அதில் ஒரு சர்க்கியூட் போர்டு இருப்பதைக் கண்டு இருப்பீர்கள்.அதைப்போன்று நமது உடலிலும் எந்தெந்த நரம்புகள் எந்தெந்த உறுப்புகளுடன் தொடரிணைப்பில் உள்ளன என்பதை வாசகர்கள் தெளிவாகத் தெரிந்து கொள்வதற்காகவே இந்தமாத அட்டைபடத்தில் வெளியிட்டுள்ளேன். (அட்டைப்பட ஆங்கில வார்த்தைகளுக்கு மன்னிக்கவும்)

புறக்கண்ணுக்குத் தெரியாத விடயங்களை நாம் எம்.ஆர்.ஐ எடுத்துப்பார்த்து தெரிந்துகொள்கிறோம்.முதுகுத் தண்டுவட நரம்புகள் அழுத்தப்படும்போது, கால்களில் மதமதப்பு, ஒரு காலில் அல்லது இரண்டு கால்களில் வலி பரவுதல், கீழ் முதுகு வலி, நடப்பதிலும் குனிவதிலும் சிரமம் போன்ற அறிகுறிகள் ஏற்படுவதை உணரலாம்.

மூட்டை தூக்கிசெல்பவர்களைப் பார்த்து இவ்வளவு எடையை எப்படி இவர் தாங்குகிறார் என்று நாம் ஆச்சரியப்பட்டு இருப்போம். இப்படி அதிகப்படியான எடையைத் தாங்குவது கீழ் முதுகெலும்புகள் தான். கீழ் முதுகெலும்புகளை  ‘லம்பார்’ எலும்புகள் என்கிறோம். இவற்றை எல்-1, எல்-2, எல்-3. எல்-4, எல்-5 என்று குறிப்பிடுகிறோம். எல்-5 எலும்பு அதற்குக் கீழ் உள்ள `சேக்ரம்’ எலும்புடன் இணைகிறது. எல்-1 மற்றும் எல்-2 எலும்புகளைச் சார்ந்த நரம்புகள் இடுப்பை மடிக்க உதவுகின்றன. எல்-3 மற்றும் எல்-4 எலும்புகளைச் சார்ந்த நரம்புகள் முழங்கால் மூட்டை அசைக்க உதவுகின்றன. எல்-5 நரம்புகள் கணுக்கால் அசைவுக்குப் பயன்படுகின்றன.

தலை முதல் கால் வரை நரம்புகள் நமக்கு எப்படி உதவுகின்றன என்பதனையும் இந்த நரம்புகள் பாதிக்கப்பட்டால்,அல்லது சேதமடைந்தால் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படலாம் என்பதனை இனி வரும் இதழ்களில் விரிவாகக் காண்போம்.

-ஆசிரியர்.

editor@tamilhealthcare.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here