அனைவரும் நோய் நொடியின்றிப் பல்லாண்டு வாழ்க

0
16

 

அனைவரும் நோய் நொடியின்றிப் பல்லாண்டு வாழ்க என்று புதுவருட வாழ்த்துகளுடன் வணங்குகிறேன்.

நீண்டகாலமாக நிறைய வாசகர்கள் ஆயுர்வேத சிகிச்சை முறை கட்டுரைகளை வெளியிடச் சொல்லி வருவதினைக் கருத்தில் கொண்டு இந்த 2018 ஆங்கிலப் புத்தாண்டு முதல் ஆயுர்வேதக் கட்டுரை ஆரம்பம்……..

அதர்வண வேதத்தின் ஒரு துணையான ஆயுர்வேதத்தைக் கொண்டே புராணகாலங்களில் நமது முன்னோர்கள் உடலை நோய் அண்டாமல் பாதுகாத்து வந்தனர்.காலங்கள் கடந்த போதும் இன்றளவும் ஆயுர்வேதம் தன்னுடைய தனித்தன்மை குறையாமல் இருப்பதற்குக் காரணம் பாரத  மக்கள் கொண்டுள்ள தீர்க்கமான நம்பிக்கையே.

இந்த ஆயுர்வேதத்தை பிரம்மா மூலம் தட்சப்ராசதிபதி கற்றார். அவரிடமிருந்து அஸ்வினி குமாரர்கள் கற்று இந்திரனுக்குச் சொல்லிக்கொடுத்தார்கள்.ஆயுர்வேதத்தின் எட்டு பிரிவுகளில் ஒன்றான உடல் மருத்துவத்தை இந்திரன்  மக்கள் நலம் விரும்பியான பரத்வாஜ முனிவருக்கும்,பரத்வாஜர் ஆத்ரேயருக்கும்,ஆத்ரேயர் அக்னிவேசர், சரகருக்கும் போதித்தனர்.இதன் விளைவாக சரக ஸ்ம்ஹிதை உருவானது.

ஆயுர்வேதத்தின் மற்றொரு பிரிவான அறுவை சிகிச்சை முறையை தன்வந்திரி மகான் மூலம் ஸுசுருதர் அவர் சீடர்களும் கற்றனர்.அவர் மூலம் நமக்குக் கிடைத்த நூலே ஸூசுருத சம்ஹிதை.

யார் இந்த ஸுசுருதர்? விஸ்வாமித்திர மகரிஷியின் பிந்தைய தலைமுறையில் பிறந்தவர் ஸுசுருதர். காசியில் வாழ்ந்தவர். பாம்பின் விஷத்தை மனிதனின்  பலநோய்களுக்கு மருந்தாகப் பயன்படுத்தி வெற்றிகண்டவர்.இன்றைய ஆங்கிலமருத்துவ முறையில் பாம்பின் விஷம் மருந்து தயாரிக்கப்படுவதற்கு முன்னோடி நமது ஸுசுருதர் என்றால் அது மிகையாகாது.

அறுவை சிகிச்சைகளின் அறிவியலை தோற்றுவித்த முன்னோடியான ஸுசுருதர் தன்னுடைய நூலில் தாய் வயிற்றில் உள்ள கருவை அறுவை சிகிச்சையால் நீக்குவது,குழந்தைப்பிறப்பின் போது சிசேரியன் என்ற அறுவை சிகிச்சை மூலம், கருவிலிருந்து குழந்தையை வெளிக்கொணர்வது இத்தகைய விஞ்ஞான விந்தைகளை 2600 ஆண்டுகளுக்கு முன் ஸுசுருதர் தமது நூலில் குறிப்பிட்டுள்ளார். உயிர் அணுக்களைக் கொண்டு செல்லும் நரம்புகளைத் துண்டித்து மகப்பேறு ஏற்படாமல் செய்வது கருத்தடை முறை. இந்த முறை பற்றி அதர்வண வேதம் ஆயுர்வேத பகுதியில் தெளிவாகச் சொல்லப்பட்டள்ளது. உடலுறவின் போது கரு தோன்றாமல் தடுக்கும் முறை ஆரணிய உபநிஷத்தில் விளக்கப்பட்டுள்ளது. கருச்சிதைவு ஏற்படுத்தும் பின்விளைவுகளை சீர் செய்யும் முறை சொல்லப்பட்டுள்ளது. பிறக்கப் போகும் குழந்தை நமது விருப்பப்படி ஆணாக அல்லது பெண்ணாகப் பிறக்க வழிவகையும் சொல்லப்பட்டுள்ளது.

ஆண்மை பெறுவதற்காக, இந்திரன் தான் இழந்த விதைக்குப்பதிலாக ஆட்டின் விதையைப் பொருத்திக் கொண்டு பயன் பெற்றான். இந்தத் தகவல், ராமாயணத்தில் சொல்லப்பட்டுள்ளது. இக்காலத்தில் விலங்குகளின் உறுப்புகளைப் பொருத்தி விஞ்ஞான விந்தைகளை மருத்துவத்துறை நடத்திக் காட்டுகிறது. ராமாயணத்தில் குறிப்பிடப் பட்ட தகவல் இதன் மூலம் உறுதி செய்யப்படலாம்.

இது போன்ற இன்னும் பல மருத்துவ அதிசயமான விடயங்களை எல்லாம் இனி வரும் இதழ்களில் ஒரு தொடராக வெளியிட இருக்கிறேன். தவறாமல் தொடர்ந்து படியுங்கள்.

வாசகர்கள் எப்பொழுதும் போல் தங்கள் மேலான ஆதரவினைத் தொடர்வதுடன் புதிய வாசகர்களுக்கும் ஹெல்த்கேர் இதழினை அறிமுகப்படுத்தி இதழின் வளர்ச்சிக்கும் உதவுங்கள்.

 

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here