நலம் நல்கும் நாரத்தை – Dr.L.மகாதேவன்

நார்த்தை என்றவுடனே நம் மனதில் தோன்றுவது முதலில் ஊறுகாய்க்காகப் பயன்படும் புளிப்புள்ள காய்தான். கமலா ஆரஞ்சும், சாத்துக்குடி ஆரஞ்சும் தோன்றாது

இனிப்புடன் கலந்த புளிப்பு, கசப்புடன் கலந்த புளிப்பு, தனிப்புளிப்பு என மூன்றாகவும் பிரிக்கலாம் இனிப்புடன் கலந்து புளிப்புப் பழத்தையும், கால மாறுபாட்டால் புளிப்புத் தூக்கலாக உள்ளதையும் புளிப்பின் கடுமையைக் குறைத்து இனிப்பைக் கூட்டச் சிறிது நேரம் வென்னீரிலோ நீராவிபடவோ வைத்திருப்பது வழக்கம். புளிப்பானதையும் கசப்புடனுள்ள புளிப்புப் பழத்தையும் ஊறுகாயாகத் தயாரிப்பர். அதன் சாற்றுடன் சாதத்தில் கலந்து பிசைந்து சித்திரான்னம் ஆக்குவதும் உண்டு. இவ்வகையில் ஜாதி நாரத்தை, கிச்சிலி நாரத்தை, துறிஞ்சி, கிடாரங்காய் கொளிஞ்சிக்காய் பயன்படுகின்றன. இவைகளின் தனிப் புளிப்பும், கசப்பும் கலந்த புளிப்பும் மேல் வயிற்றில் உள்ள ஜீர்ண கோசத்தையும், நாவிலுள்ள ருசிகோளங்களையும் சுறுசுறுப்படையச் செய்து சீக்கிரம் உணவை ஜீரணிக்க உதவுகின்றன. கல்லீரலும் சுறுசுறுப்படைந்து ஜீர்ணத்தைத் தொடர்ந்து சத்து உடலில் சேரும் அளவு பணியாற்றுகிறது.
புளிப்புள்ள நாரத்தை ஊறுகாயாக உபயோகிக்கும் போது ஒரு தனிப்பட்ட குணத்தைக் காட்டுகிறது. தான் ஒரு சட்டத்திற்கும் கட்டுப்படாமல் பிறரைச் சட்டத்திற்குக் கட்டுப்பட உபதேசிக்கும் தற்கால அரசியல்வாதியைப் போலவே இந்த நாரத்தையும், இதனுடன் உட்கொண்ட உணவு சீக்கிரம் ஜீர்ணமாகிவிடும். ஆனால் இது ஜீர்ணமாக (மேல் வயிற்றைவிட்டுக் கீழிறங்க) வெகு நேரமாகும். சாப்பிட்டு வெகு நேரமாகி மேல் வயிறு லேசான உணர்ச்சி வந்த பிறகும் இந்த ஊறுகாய் மணமுள்ள ஏப்பம் வந்து கொண்டிருக்கும். இதன் அதிகப்பிரசங்கித் தனத்தை நமக்குக் காட்டிக் கொண்டிருக்கும்.
ஆரஞ்சும் பம்பிளிமாஸும் இனிப்பு மிக்கவை. பழ உணவாக ஏற்றத்தக்கவை. ஆரஞ்சிலும் இருவகை உண்டு. கமலாவும், சாத்துக்குடியும் இன்று நம்மிடையே பிரஸித்தமானவை. சாத்துக்குடியைவிட கமலா நாரத்தை நல்ல மணமும் இனிப்பும் அதிகம் உள்ளது. ஆனால் சாத்துக்குடியைவிட குளிர்ச்சி அதிகம் தரக்கூடியது. ஆகவே சிலருக்கு சில உடல் நிலைகளில் ஒத்துக் கொள்வதில்லை சாத்துக்குடியில் அத்தனை சீதளம் கிடையாது. அதிக அளவில் எல்லா நில களிலும் எல்லாருக்கும் ஒத்துக்கொள்ளக் கூடியது.

உணவிற்கு உணவாகவும், மருந்திற்கு மருந்தாகவும் சாத்துக்குடியும், கமலாவும் உதவக்கூடிய முக்கியமான சில நிலைகள் உண்டு. கடும் நோய்வாய்ப்பட்டு நோயின் உக்கிரம் தணிந்தபின் உடலில் தளர்ச்சியும், களைப்பும் நீங்க இவை நன்கு பயன்படுகின்றன. நாக்குத் தடித்தோ, மரத்தோ சுவை உணராதபடி இருத்தல், அதனால் சுவை உணராதபடி மனமுவந்து உணவேற்க முடியாத நிலையில் ஏற்படும் உமட்டல், அருசி, அன்னத்வேஷம் இவைகளை இது மாற்றிவிடுகிறது. உணவு உட்கொண்டதும் மேல் வயிறு இரைப்பை உள்ள இடம் கனத்து அசதி, உணவு சரிவர செரியாமல் உடல் பலவீனப்படுத்துவது இவைகளைத் தடுக்கிறது. உணவு ஜீரணமாகும் நிலையில் ஜீர்ணத் திரவக் கலவை சீர்கெடுவதால் ஏற்படும் வயிற்று உப் புசத்தையும் அஜீர்..ணமாக இளகலாகவோ குழம்பலாகவோ மலம் வெளியாவதையும் தடுக்கின்றது. முக்கியமாக இரைப்பை குடல் கல்லீரல் மண்ணீரல் நாக்கு இவைகளைச் சுறுசுறுப்படையச் செய்து சுத்தமாக்குவதில் இது பெரிதும் உதவுகின்றது. மேல் வயிறு கனம் குறைவதால் ஹிருதயத்தில் அழுத்தம் குறைந்து ஹிருதயம் சீராக வேலை செய்ய முடிகிறது உட்காங்கை, கண்ணெரிவு, நாவறட்சி, தலை சுற்றுதல் முதலிய நிலைகளில் நல்ல மருந்தாகவும், உணவாகவும் உதவுகிறது.
வயிற்றில் வேக்காளத்துடன் இரைப்பையிலும் குடலிலும் புளிப்பு மிகுந்துள்ள நிலையிலும் பித்தத்தால் வயிற்றுப்போக்கு ஏற்படுத்தும் போதும் அஜீர்ணத்தால் ஏற்பட்டு ஜ்வரம், குளிர் ஜ்வரம் இவைகளின் ஆரம்ப நிலையிலும், நீர்த்திருக்கும் சளியுடன் கூடிய இருமல், மூச்சுத்திணறல் உள்ள நிலையிலும் ஒத்துக்கொள்வதில்லை.
பொதுவாகக் காலையிலும், வெறும் வயிற்றிலும் உண்பது அவ்வளவு நல்லதல்ல உணவிற்குப் பிறகும், வெயில் உள்ள வேளைகளிலும் மிகவும் ஏற்றது. புளிப்பை அறவே நீக்கத்தக்க நிலைகளில் இவையும் தவிர்க்க வேண்டியவையே. அதிக அளவில் சாப்பிடுவதும் உசிதமல்ல.

துறிஞ்சிப்பழம், கர்ப்பிணிகளின் காலை உமட்டல், வாந்தி, தலைச்சுற்று, அசதி முதலியவைகளைக் குறைப்பதில் நிகரற்றது. இதன் சாறும், சர்க்கரையும் (இஞ்சியும் சிலர் சேர்ப்பர்) சேர்த்துப் பானகமாக்கி 1-2 ஸ்பூன் தினம் 5-6 வேளைச் சாப்பிடலாம் மாதீபலரஸாயனம் என்று பிரசித்தமான பானகம் இந்தப் பழத்தாலானதே
கசப்பு நார்த்தை, புளிப்பு நார்த்தை, துறிஞ்சி கமலா இவைகளின் தோலும் நல்ல ஜீர்ணகாரி பழத்தோலைக் கஷாய மிட்டு வாந்தி, அஜீர்ணம், மந்தம் இவைகளில் கொடுப்பதுண்டு
ஜாதி நார்த்தை இலை, புளிப்பு நார்த்தை இலை இவைகளில் ஒன்றை சுத்தமாக எடுத்து உப்பு சேர்த்து இடித்து வைத்துக் கொண்டு ஊறுகாயாகத் தொட்டுக் கொள்வதுண்டு. இதை வேப்பிலைக் கட்டி என்பர்.
வேப்பிலைக்கும், இதற்கும் சம்பந்தமில்லை. வயிற்றில் கீரிப்பூச்சி கிருமி உள்ளவர்களுக்கு வேப்பிலை கொழுந்து சாப்பிடக் கொடுப்பது வழக்கம். அதன் துவர்ப்பும், கசப்பும் வெகுட்டலைத் தருமானதால் அதைக் குறைக்க நார்த்தை இலையும் சேர்த்து இடித்துக் கொடுப்பது வழக்கம். அதனால் வேப்பிலைக்கட்டி எனத் தனி நார்த்தை இலைப் பொடிக்கும் பெயர் அமைந்துவிட்டது எனலாம்.